கோவையில் பெற்றோருடன் இரவு உறங்கிக்கொண்டிருந்த இரண்டரை வயது பெண் குழந்தை கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை அன்னூரில் ஜேசிபி இயந்திரம் வாடகைக்கு விடும் தொழில் நடத்தி வருபவர் கனகராஜ். அவரது மனைவி காஞ்சனா மற்றும் இரண்டரை வயது பெண் குழந்தை அம்ருதா இருவரும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அவர்களது வீட்டிற்கு உறவினர்கள் வந்திருந்தனர். இரவு உணவு சாப்பிட்ட பின்பு குழந்தையுடன் காஞ்சனா மற்றும் கனகராஜிம் வீட்டின் உள்ளே உறங்க சென்றார். வீட்டின் வெளியே உறவினர்கள் உறங்கி கொண்டிருந்தனர். காலை 4.30 மணியளவில் பால்காரர் வந்து எழுப்பியபோது, தன் பக்கத்தில் படுத்திருந்த குழந்தையை காணவில்லை என்று காஞ்சனா அழுது கூச்சலிட்டார். வீட்டில் இருந்த அனைவரும் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்து குழந்தை கிடைக்கவில்லை. 

இந்நிலையில், வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் பாழடைந்த கிணற்றில் குழந்தை அம்ருதா கிடப்பதை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். உடனே கிணற்றில் கயிற்றை கட்டி இறங்கி குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை அம்ருதா இறந்துவிட்டதாக கூறினர். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியை யாராவது கடத்தி சென்று கொலை செய்து கிணற்றில் வீசினார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுமியின் உடற்கூறு ஆய்வுக்கு பிறகே சிறுமி எப்படி இறந்தார் என்பது குறித்து தகவல் தெரியவரும்.