திருமணமான இளம்பெண் மர்ம மரணம்... தந்தை போலீசில் பரபரப்பு புகார்..!
தர்மபுரியில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தர்மபுரியில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள கடக்கார அள்ளி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (46). இவருக்கு ஜெயபிரியா (22) என்ற மகள் உள்ளார். இவருக்கும் கிருஷ்ணகிரி காவேரிபட்டணம் பையூர் அடுத்த கோனார் கொட்டாயை சேர்ந்த சிலம்பரசன் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சிலம்பரசன் ஓசூரில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், ஜெயபிரியா திருமணத்தின் போது 10 சவரன் நகை அணிந்து வந்தார். இதை சிலம்பரசன் குடும்பத்தினர் அடகு வைத்து விட்டனர். அந்த நகையை மீட்டு தரும்படி ஜெயபிரியாவின் பெற்றோர் அடிக்கடி கூறிவந்தனர். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, நேற்று மாலை 6 மணியளவில் ஜெயபிரியா தனது தந்தைக்கு போன் செய்து நகைக்காக மாமியார் வீட்டில் பிரச்சனை செய்து வருவதாக அழுதபடியே கூறியுள்ளார்.
அப்போது, ஜெயபிரியாவின் மாமியார் தனது மகனுக்கு இன்னொரு திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளார். இதனை கேட்டுக்கொண்டிருந்த தந்தை மகளை சமாதானப்படுத்தினர். இரவு 8.30 மணியளவில் ஜெயபிரியா இறந்து விட்டதாக தந்தைக்கு சிலம்பரசன் போனில் தகவல் தெரிவித்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜெயபிரியா உடலை கைப்பற்றி பிரேத பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை முருகன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.