Thoppur Accident: தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி கோர விபத்து 4 பேர் பலி
தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் தேசிய நெடுஞ்சாலையின் இரட்டை பாலத்தில் இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் அடுத்தடுத்த 5 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தமிழகத்தில் இருந்து சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் வழியாக கர்நாடகா செல்லும் தேசிய நெடுஞ்சாலையானது முக்கிய சாலைகளில் ஒன்றாக உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக லாரிகள், கண்டெய்னர்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த பாதையை பயன்படுத்தி வருகின்றன.
இந்த நெடுஞ்சாலையில் தொப்பூர் கணவாய் மலைப்பாதை பகுதி சுமார் 6 கி.மீ. தொலைக்கு அமைந்துள்ளது. அத்துடன் கட்டமேடு முதல் போலீஸ் சோதனைச் சாவரை வரை உள்ள 3 கி.மீ. தொலைவில் சாலை மிகவும் வளைவாகவும், பல இடங்களில் சரிவாகவும் காணப்படுகிறது.
இதன் காரணமாக இந்த பாதையை பயன்படுத்தி நீண்ட தூரத்தில் இருந்து அதிக பாரம் ஏற்றி வரும் கனரக வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. தமழிகத்தில் அதிக விபத்துகள் நடக்கும் பகுதியாக தொப்பூர் கணவாய் பகுதி உள்ளது. அந்த வகையில் நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று அதிவேகமாக வந்து கொண்டு இருந்தது.
திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னாள் சென்ற லாரிகள், கார்கள் மீது வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு லாரி நிலைத் தடுமாறி பாலத்தில் இருந்து மொத்தமாக கீழே விழுந்து நொறுங்கியது. இதில் லாரியில் பயணம் செய்த மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தமிழகத்தில் பாஜக 25 இடங்களுக்கு மேல் வெல்வது உறுதி - மதுரையில் முன்னாள் முதல்வர் சவால்
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்ட நிலையில் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.