தர்மபுரியில் பேருந்துக்காக காத்திருந்த 4 பெண்களிடம் சில்மிஷம் செய்த காவலர்
தர்மபுரி மாவட்டத்தில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்த 4 பெண்களிடம் பாலியல் ரீதியாக சீண்டலில் ஈடுபட்ட காவலரின் செயல் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் அரூர் ரவுண்டானா பகுதியில் பேருந்துக்காக 4 பெண்கள் காத்திருந்தனர். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இவர்கள் பணியை முடித்துவிட்டு, சொந்த ஊருக்கு திரும்பி செல்ல, பேருந்துக்காக காத்திருந்த வேலையில், மது போதையில் இருந்த ஆசாமி ஒருவர் செல்போன் பேசிக்கொண்டே நான்கு பெண்களையும் சுற்றி வந்துள்ளார்.
பின்பு பெண்களை பின்பக்கத்தில் கையால் தட்டி சில்மிஷம் செய்துள்ளதை அடுத்து, அந்தப் பெண்கள் தங்களது உறவினர்களுக்கு கொடுத்த தகவலின் பேரில், அங்கு வந்த இளைஞர் ஒருவர் அருகாமையில் உள்ள காவல் நிலையத்திற்கு பெண்களிடம் சில்மிஷம் செய்த நபரை அழைத்து வந்துள்ளார்.
அப்படி வரும்பொழுது, தம்பி நீ? யார் எந்த ஊர்? என்ன வேலை செய்கிறாய் என கேட்டுக்கொண்டே வந்தபோது, தான் ஊட்டி தொட்டபெட்டா பகுதியில் காவலராக பணிபுரிந்து வருவதாகவும், தான் செய்தது தவறுதான், இருந்தாலும், உன்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய் என அந்த இளைஞரிடம் மது போதையில் இருந்த காவலர் சத்தம் போட்டு மிரட்டியுள்ளார்.
பின்பு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், தன்னுடைய பெயர் வெங்கடேச பெருமாள் எனவும், தான் காவலராக பணிபுரிந்து வருவதாகவும், நான் செய்தது தவறுதான், என்னை மன்னித்து விடுங்கள் என கேட்டுள்ளார்.
இவர் அதிகளவில் மது போதையில் இருந்ததால், அவரது மனைவி மற்றும் உறவினர்களை வரவழைத்து பின்பு, காலை நேரத்தில் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும், காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என தெரிவித்து காவல் துறையினர் அனுப்பிவைத்தனர்.
அப்போது மது போதையில் மன நெகிழ்வுடன் சென்ற போதை காவலர், ஸ்டேஷன் வளாகத்தில் இருந்த இருசக்கர வாகனங்களை, இது தன்னுடைய வாகனம்தான் என சாவி போட்டு திறப்பதும், இருசக்கர வாகனங்களை சுற்றிசுற்றி வந்ததும், பார்ப்பவர்களின் கண்களுக்கு வேடிக்கையாக இருந்தது.
காவலர் மது போதையில் செய்தது வேடிக்கையாக இருந்தாலும் கூட, பெண்ணுக்கு ஏதேனும் அசம்பாவிதமோ, வன் சீண்டலோ, குடும்ப பிரச்சனையோ உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டால் முதலில் காவல் துறைக்கு தகவல் கொடுங்கள் என தமிழ்நாடு காவல்துறை தலைவர் தெரிவித்து வரும் நிலையில் ஒரு காவலர் மது போதையில் நான்கு பெண்களிடம் தவறாக நடந்து கொண்டது மிகப்பெரிய தவறு இது மண்ணிக்க முடியாத ஒன்று என சம்பவத்ததை பார்த்த மக்கள் பரிதவிக்கின்றனர்.