பஞ்சாயத்து தலைவர் வேட்பாளர் மாரடைப்பால் திடீர் உயிரிழப்பு.. சோகத்தில் மூழ்கிய கிராமம்..!
பென்னாகரம் ஒன்றியத்தில், பஞ்சாயத்து தலைவர் வேட்பாளர் நேற்று அதிகாலை திடீரென மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பென்னாகரம் ஒன்றியத்தில், பஞ்சாயத்து தலைவர் வேட்பாளர் நேற்று அதிகாலை திடீரென மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கூத்தப்பாடி பஞ்சாயத்து. இதில், 12 வார்டுகளும், 10 ஆயிரத்து, 600 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு, ஒகேனக்கலும் இருப்பதால், தேர்தல் நேரத்தில் எப்பொழுதும் போட்டிகளுக்கு பஞ்சமிருக்காது. இந்த பகுதியில் உள்ளாட்சி தேர்தல் 2-ம் கட்டமாக வரும், 30-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு, 9 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில், கூத்தப்பாடி பஞ்சாயத்து, குள்ளாத்திரம்பட்டி புதூரை சேர்ந்த பூபதி, (55) போட்டியிடுகிறார். இவர் சூறாவளி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், இவருக்கு நேற்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், கூத்தப்பாடி ஊராட்சி மன்ற தேர்தல் நடைபெறவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவியது. இதுதொடர்பாக பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலர் கூறுகையில்;- உள்ளாட்சி தேர்தல் விதிமுறைப்படி, இரண்டு வேட்பாளர்கள் மட்டும் போட்டியிட்டு, ஒருவர் மரணம் அடைந்தால் தேர்தல் ரத்தாகும். இந்த ஊராட்சியில், ஒன்பது பேர் போட்டியிடுவதால், இறந்தவரை இறப்பு என்று அறிவித்துவிடும். ஆகையால், திட்டமிட்டப்படி தேர்தல் நடைபெறும் என தகவல் தெரிவித்துள்ளார்.