தர்மபுரியில் சட்டக்கல்லூரி மாணவி மீது தாக்குதல்; குறிப்பிட்ட சமூகத்தினர் திரண்டதால் பரபரப்பு
தர்மபுரி மாவட்டத்தில் கல்லூரி முடிந்து வீட்டிற்குச் சென்ற சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவியை கேலி செய்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி மாவட்டம் அரூர் முத்தானூர் அருகே உள்ள கம்மாளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவரது மகள் சரண்யா (வயது 20). இவர் சேலம் அரசு சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மாலை கல்லூரிக்கு சென்று விட்டு தனியார் பேருந்தில் இறங்கி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றாக அமர்ந்து கொண்டு அந்த வழியாக சென்று கொண்டிருந்த பெண்கள், பெண் குழந்தைகள் என அனைவரையும் கேலி செய்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அவ்வழியாக வந்த சரண்யாவையும் விட்டு வைக்காத இளைஞர்கள், அவரிடம் சற்று கூடுதலாக உரிமை எடுத்துக் கொண்டு மதுபோதையில் பெயர், வயதை கேட்டு கேலி செய்துள்ளனர். மேலும் அவரது கையை பிடித்து இழுத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து சரண்யா அவருடைய அம்மா குமுதாவிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவருடைய அம்மா அந்த இளைஞர்களிடம் முறையிட்டுள்ளார். அப்போது அங்கிருந்த இளைஞர்கள் சிலர் குமுதா மீது தாக்குதல் நடத்தியதாகவும், தாக்குதல் குறித்து தகவல் அறிந்த அவருடைய உறவினர்கள் எதற்காக அடிக்கின்றீர்கள் என்று கேட்டபோது அங்கு பெரும்பான்மையாக வாசிக்கக் கூடிய குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் வந்து தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
தாக்குதலுக்குள்ளான சரண்யா உட்பட 8 பேர் அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் உடனடி நடவடிக்கை வேண்டும் என்று காவல் நிலையம் முன்பாக முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.
சட்டம் படிக்கும் சட்டக் கல்லூரி மாணவிக்கு இந்த நிலை என்றால் அந்த பகுதி வாழ் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதாகவே சட்டக் கல்லூரி மாணவி சரண்யா கவலை தெரிவித்துள்ளார்.