நீட் தேர்வு அழுத்தத்தால் தமிழகத்தில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை..! ஒரே நாளில் 2 மாணவர்கள் உயிரிழந்த சோகம்
நீட் தேர்வு எழுத இருந்த தர்மபுரி மாணவன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இன்று மதுரை மாணவி தற்கொலை செய்துகொண்ட அவரை தொடர்ந்து தர்மபுரி மாணனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவ படிப்பில் சேர தேசியளவில் நடத்தப்படும் நீட் தேர்வுக்கு, அத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒன்றுதிரண்டு நீட் தேர்வை எதிர்த்து வருகிறார்கள்.
நீட் தேர்வால் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவு தகர்ந்ததால் தமிழ்நாட்டில் முதலில் தற்கொலை செய்துகொண்டது அரியலூர் மாணவி அனிதா. அனிதாவின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு பின்னர் மேலும் ஒரு மரணம் நீட் தேர்வால் தமிழகத்தில் நடக்கக்கூடாது என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் விருப்பமாகவும் இருந்தது.
ஆனால் தமிழ்நாட்டில் நீட் தேர்வால் தொடர்ச்சியாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று மதுரை மாணவி ஜோதி துர்கா நீட் தேர்வு அழுத்தத்தால் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். அதுவே பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் அவரை தொடர்ந்து தர்மபுரி செந்தில் நகரை சேர்ந்த ஆதித்யா என்ற நீட் தேர்வுக்கு தயாராகிவந்த மற்றொரு மாணவரும் தற்கொலை செய்துகொண்டார்.
இன்று ஒரே நாளில் தமிழ்நாட்டில் நீட் தேர்வால் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழக மக்களை மீளாச்சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் நீட் தேர்வால் 17 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.