கண் இமைக்கும் நேரத்தில் கோர விபத்து.. 12 கார்கள் மீது அடுத்தடுத்து மோதல்.. 4 பேர் பலி.. ஓட்டுநர் கைது.. CCTV
தர்மபுரி அருகே தொப்பூர் கணவாயில், அடுத்தடுத்து 12 கார்கள் மீது லாரி மோதியதில் 4 பேர் உயிரிழந்த விவகாரத்தில் வனப்பகுதியில் மறைந்திருந்த ஓட்டுநர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
தர்மபுரி அருகே தொப்பூர் கணவாயில், அடுத்தடுத்து 12 கார்கள் மீது லாரி மோதியதில் 4 பேர் உயிரிழந்த விவகாரத்தில் வனப்பகுதியில் மறைந்திருந்த ஓட்டுநர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திராவிலிருந்து சிமென்ட் மூட்டை ஏற்றிய லாரி ஒன்று தருமபுரியைக் கடந்து சேலம் நோக்கி நேற்று சென்று கொண்டிருந்தது. இதனிடையே, ஒரு மினி லாரியும், பைக்கும் மோதிக் கொண்டதால், அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதையடுத்து, ஒரு வழிப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டது. இதனால், தர்மபுரி-சேலம் சாலையில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.
இந்நிலையில், இந்த விபத்து நடந்த இடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில், சிமென்ட் பாரம் ஏற்றி வந்த லாரி, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் மெதுவாக சென்றுக்கொண்டிருந்த கார்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இதில், கார்கள் தூக்கி வீசப்பட்டு ஒன்றன் மீது ஒன்று விழுந்து நொறுங்கியது. கண் இமைக்கும் நேரத்தில் லாரி மோதியதால் காரில் சென்றவர்கள் என்ன நடந்தது என்று அறியாமலேயே விபத்தில் சிக்கி அலறினார்கள். இதில் 12 கார்கள், ஒரு டூவீலர், ஒரு மினி லாரி என அடுத்தடுத்து மோதி அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் காரில் சென்ற 4 பேர், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 20 பேர் படுகாயமடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உடனே விபத்து தொடர்பாக தகவலறிந்த தொப்பூர் மற்றும் தர்மபுரி போலீசார், தீயணைப்பு துறையினர் வந்து காயமடைந்தவர்களை சேலம் மற்றும் தர்மபுரி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்கள் பற்றிய விவரம் எதுவும் உடனடியாக தெரியவில்லை.
இதையடுத்து, விபத்தில் சிக்கிய கார்களை கிரேன் மூலம் மீட்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். இந்த விபத்தால், சாலையின் இருபுறமும் 5 கிமீ தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதன் காரணமாக, 3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சினிமாவை மிஞ்சும் வகையில் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. விபத்து ஏற்படுத்திவிட்டு வனப்பகுதியில் மறைந்திருந்த ஓட்டுநர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதற வைக்கிறது.