தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக தருமபுரி இருந்து வந்த நிலையில் தற்போது லாரி ஓட்டுநர் ஒருவருக்கு நோய் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். 

தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து குமரி வரை அனைத்துப் பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் புதுக்கோட்டையில் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்கள் மட்டும் கொரோனா பாதிப்பிலிருந்து தப்பித்துள்ளதாக கூறப்பட்டது. இந்த 2 மாவட்டங்களிலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக கொரோனா நோய் இங்கு ஊடுருவவில்லை. இதனால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சுடன் இருந்தனர்.

இந்நிலையில் தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே லாரி டிரைவர் ஒருவருக்கு கொரோனா நோய் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்தைச் சேர்ந்த 35 வயது லாரி ஓட்டுநர் காய்கறிகள் ஏறி மதுரை வரை சென்று திரும்புவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஊரடங்குக்கு முன்பாக அவர் டெல்லி சென்றும் திரும்பியுள்ளார். இவருக்கு கொரோனா குறித்த அறிகுறிகள் ஏதும் இல்லாவிட்டாலும் சோதனை அவசியம் என அதிகாரிகள் அறிவுறுத்தினர். 

இதனால் நேற்று அவரை அழைத்துச் சென்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் மற்றொரு பரிசோதனை முடிந்தபின்னர் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரது குடும்பத்தினர் மற்றும் அவருடன் நெருங்கிய  தொடர்பில் இருந்தவர்கள் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அவரது வீடு உள்ள பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.