கல்லூரி பேருந்து-லாரி நேருக்கு நேர் பயங்கர மோதல்..! படுகாயங்களுடன் உயிர்தப்பிய மாணவிகள்..!
தருமபுரி அருகே லாரி மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
தருமபுரி மாவட்டம் தொப்பூரில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கல்லூரிக்கு சொந்தமான பேருந்தில் மாணவிகள் தினமும் வீட்டில் இருந்து வந்து சென்றுள்ளனர். இன்று காலையும் கல்லூரி பேருந்து மாணவிகளை ஏற்றி சென்று கொண்டிருந்தது.
அப்போது பேருந்து வந்த அதே சாலையின் எதிரே லாரி ஒன்று வேகமாக வந்துள்ளது. எதிர்பாராத விதமாக கண்ணிமைக்கும் நேரத்தில் லாரியும் கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் பேருந்தின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. திடீரென நடந்த விபத்தால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் அலறினர். அந்த வழியாக சென்றவர்கள் விபத்தில் சிக்கிய மாணவிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் இரண்டு மாணவிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மற்ற மாணவிகள் லேசான காயமடைந்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.