மர்ம காய்ச்சலுக்கு பலியான ஒன்றரை வயது குழந்தை..! அடுத்தடுத்த மரணங்களால் பொதுமக்கள் பீதி..!
தர்மபுரி அருகே ஒன்றரை வயது குழந்தை உட்பட இருவர் மர்மக்காய்ச்சலுக்கு பலியாகி இருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே இருக்கும் சந்தைமேடு பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. விவசாயம் பார்த்து வருகிறார். இவருடைய மகள் மித்ரா ஸ்ரீ(1½). குழந்தைக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்திருக்கிறது. இதனால் ஏரியூரில் இருக்கும் அரசு மருத்துவமனையில் மித்ராஸ்ரீயை சிகிச்சைக்காக பெரியசாமி கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.
இந்தநிலையில் வெள்ளிக்கிழமை சிறுமிக்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகமாகவே, மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். பின்னர், குழந்தை மித்ரா ஸ்ரீக்கு இரவு உணவுடன் மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட மருந்துகளை பெற்றோர் கொடுத்திருக்கின்றனர். சனிக்கிழமை காலையில் மித்ரா எவ்வித அசைவுமின்றிக் காணப்பட்டதால் பெற்றோர் செய்வதறியாது திகைத்துள்ளனர். உடனடியாக குழந்தையை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இரவு ஏற்பட்ட கடுமையான காய்ச்சலால் மித்ரா ஸ்ரீ உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அதைக்கேட்ட பெற்றோர் கதறி துடித்தனர்.
இதேபோன்று ராமகொண்டஅள்ளி ஊராட்சிக்கு உட்பட குண்டப்பன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ராஜன்(34) என்பவரும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மர்மக்காய்ச்சலால் பலியானார். இதனால் அந்த பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். இதன்காரணமாக ஏரியூர் பகுதியில் மர்ம காய்ச்சல் பரவுவதை தடுக்க மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என்றும் சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.