தருமபுரியில் தாய் சௌமியா அன்புமணிக்கு வாக்கு சேகரித்த மகள் சங்கமித்ரா!
தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணிக்கு ஆதரவாக அவரது மகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மக்களவைத் தேர்தல் 2024க்கான பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. வேட்பாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக கூட்டணியின் பாமக வேட்பாளரும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவியுமான சௌமியா அன்புமணிக்கு ஆதரவாக அவரது இரண்டு மகள்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படு, தருமபுரி முக்கிய பகுதியான மதிகோன் பாளையம், கோட்டை கோயில், சந்தைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சௌமியா அன்புமணியின் இரண்டாவது மகள் சங்கமித்ரா தனது தாயாருக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அண்ணாமலைக்கு ஆதரவாக நடனமாடி டான்ஸ் மாஸ்டர் கலா பிரசாரம்!
அப்பொழுது சனி பிரதோஷத்தையொட்டி கோட்டை சிவன் கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களிடம் துண்டு பிரசுரங்களை கொடுத்து தனது தாய்க்கு வாக்களிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார். பின்னர் குடியிருப்பு பகுதிகளில் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது, அதே பகுதியில் வீட்டிற்கு வெளியில் அமர்ந்திருந்த மூதாட்டியின் அருகில் அமர்ந்து தன்னை அறிமுகம் செய்து கொண்டு, பாமகவிற்காக தர்மபுரியில் போட்டியிடும் தனது தாய் சௌமியா அன்புமணிக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்கவும் வாக்களிக்க வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தார். தனது தாய் வெற்றி பெற்றால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள குடிநீர் பிரச்சினை உட்பட அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பார் என்றும், அதனால் தனது தாய்க்கு வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.