தர்மபுரி - சேலம் இடையே 4கி.மீக்கு மலைப்பாதை வழியே சாலை அமைக்க வேண்டும்! - இ.கம்யூ முத்தரசன் வலியுறுத்தல்!
தருமபுரி-சேலம் மாவட்டங்களை இணைக்கும் 4 கி.மீ மலைப்பாதை வழியாக சாலை அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
தருமபுரி மாவட்டம் மிட்டாரெட்டி அள்ளியை அடுத்த கோமேரிக் கொட்டாய் கிராம மக்கள் பொம்மிடி பகுதியில் இருந்து மக்கள் விவசாய வேலைகள், பள்ளி, கல்லூரிகள் என சென்று வருகின்றனர். இந்த பொம்மிடி மற்றும் கோமேரிக்கொட்டை இடையில் வனப்பகுதியில் மலை சாலையை கடந்து இந்த பகுதியில் உள்ள மக்கள் அன்றாடம் பயணித்து வருகின்றனர்.
இந்த மலைப் பகுதியில் முறையான சாலை வசதி இல்லாததால், இந்த பகுதி மக்கள் சுமார் 50 கிலோ மீட்டர் சுற்றி வருகின்ற நிலையில் இருந்து வருகிறது. இதனால் இந்த நான்கு கிலோமீட்டர் உள்ள மலை சாலையை இணைக்க வேண்டும் என கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு பவர் கிரீட் உயர்மின் கோபுரம் அமைப்பதற்காக இந்த வனப் பகுதியில் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் சாலை பணிகள் முடிவடைந்த உடன் இந்த சாலை முழுவதுமாக அடைக்கப்பட்டது என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அந்த சாலை இருந்தவரை பொதுமக்கள் அதை பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது பயன்படுத்த முடியாத சூழலில் இருந்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
மலை கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, மலைப் பகுதியில் தருமபுரி-பொம்மிடி மற்றும் தருமபுரி-சேலம் மாவட்டத்தை இணைக்கும் மலை பாதை அமைய உள்ள இடத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேரில் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் சூழலில், இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மலை பாதையில் 2 கிலோமீட்டர் சாலை அமைத்து தருமபுரி மற்றும் பொம்மிடி பகுதிகளை இணைக்க முடியவில்லை என்றால் வியப்பாக உள்ளது என்றார்.
இங்குள்ள விவசாய கூலி தொழிலாளிகள் பயன்பெறும் வகையில் இந்த 2 கிலோமீட்டர் சாலையை மலைப்பாதையில் அமைக்க அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், மேலும் இந்த இணைப்பு சாலை அமைக்கப்படும் பட்சத்தில் தருமபுரியில் இருந்து பொம்மிடி மற்றும் சேலம் மாவட்டத்திற்கு செல்வது எளிதாக இருக்கும். பல கிலோமீட்டர் தூரம் சுற்றி வருவது இதனால் குறையும் என்றும் தெரிவித்தார்.
சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழக அரசு இந்த சாலை பணிகளை உடனடியாக அமைக்க தனி கவனம் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் முத்தரசன் வலியுறுத்தினார். இதே பாதையில் பவர் கிரேட் மின் பாதை அமைக்க அனுமதி அளித்து, அதற்கான கோபுரங்களும் நிறுவப்பட்டு, தற்போது செயல்பாட்டிலும் வந்துள்ளது. ஆனால் பொதுமக்கள் பயன்படும் வகையில் இது வழித்தடத்தில் சாலை அமைக்க அனுமதி அளிக்காமல் இருப்பது வருத்தத்துக்குரியது" என முத்தரசன் தெரிவித்தார்.