அரூர் அருகே மான்கறி சாப்பிட்டதாகக்கூறி ஒருவரை வனத்துறையினர் சித்தரவதை! போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்!
அரூர் அருகே, மான் கறி வாங்கி சாஅப்பிட்டதாக சிவன் என்பவரை வனத்துறையினர் அடித்து சித்தரவதை செய்ததாக கூறி, வன துறையினரை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள சோளகொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவன்(வயது 47) கடந்த வாரம் இதே கிராமத்தைச் சேர்ந்த சிவன் மற்றும் சேட்டு ஆகியோர், பாலக்கோடு பகுதியில் மான் வேட்டையாடி கறி விற்பனை செய்ததாக இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராத தொகையாக ரூபாய் 85 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது
சோளகொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த ராஜ் மகன் சிவன் என்பவருக்கு கறி விற்பனை செய்ததாக அல்லிமுத்து என்பவர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பேரில், கடந்த ஒரு வாரமாக சிவன் என்பவரை கைது செய்வதற்காக ரேஞ்சர் ஆலயமணி தலைமையிலான குழுவினர் இரவு பகல் நேரங்களில் கிராமத்திற்குள் வந்ததாக பொதுமக்கள் மத்தியில் அவரது உறவினர்கள் மத்தியிலும் கூறப்படுகிறது
இந்நிலையில் சிவன் என்பவரை கைது செய்ய வந்த வனத்துறையினர், கைது செய்ய முற்படும்போது வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதன் பிறகு ஆலயமணி தலைமையிலான வனத்துறையினர் சிவனை, பூட்ஸ் காலால் எட்டி உதைத்தும் கையில் வைத்திருந்த கம்புகளால் அடித்ததாக கூறப்படுகிறது
இதனால் உடலில் கால் மற்றும் கை பகுதிகளில் காயங்கள் ஏற்பட்ட நிலையில் அவரை மருத்துவமனைக்கு கிராம மக்கள் கொண்டு செல்ல முற்பட்டபோது வனத்துறையினர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து வனத்துறையினரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்
இதுகுறித்து ரேஞ்சர் ஆலயமணியிடம் கேட்டபோது, அல்லி முத்து சேட்டு ஆகிய இருவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சிவன் மீது மான் கறி வாங்கி சாப்பிட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக அவரை கைது செய்ய வந்துள்ளதாக தெரிவித்தார்.