தனியாக இருந்த மூதாட்டிக்கு ஆப்பிளை நருக்கி கொடுத்து 40 சவரன் நகை கொள்ளை; மைத்திலிக்கு போலீஸ் வலை?
தருமபுரி மாவட்டத்தில் தனியாக இருந்த மூதாட்டிக்கு மயக்க மருந்து கலந்த ஆப்பிளை சாப்பிட கொடுத்துவிட்டு 40 சவரன் நகையை கொள்ளையடித்த பெண்ணை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் வசித்து வருபவர் சிவசேகர். இவர் அரசு பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஜெயந்தியும் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த 26ம் தேதி கணவன், மனைவி இருவரும் அவரவர் பணிக்கு சென்றிருந்தபோது, மதியம் வீட்டில் சிவசேகரின் வயதான தாயார் பெருமா, மற்றும் இவருடைய வயதான உறவினர் ஆகிய இருவர் இருந்துள்ளனர்.
இந்நிலையில், கார் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர் வீட்டினில் நுழைந்து தான் உங்கள் மருமகள் ஜெயந்தியினுடைய தோழி என தெரிவித்து, அவர்களிடம் நலம் விசாரித்து பேசத் தொடங்கியுள்ளார். அப்போது அங்கிருந்த முதியவர் தனக்கு தருமபுரியில் வேலை இருப்பதாக தெரிவித்து சென்றுள்ளார். இவரை கண்காணிக்க அந்த பெண்ணும் பின்தொடர்ந்துள்ளார். அப்போது அந்த முதியவர் தருமபுரிக்கு பேருந்து மூலம் சென்ற பின்பு அந்த அடையாளம் தெரியாத பெண் தனியாக இருந்த மூதாட்டியிடம் ஆப்பிள் பழங்களுடன் வீட்டிற்குள் சென்று, முதியவர் சீட்டு ஒன்றை வீட்டிலேயே விட்டுச் சென்று விட்டதால் அதனை எடுத்து வர தன்னை அனுப்பி வைத்துள்ளார் என தெரிவித்துள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
பின்பு எந்த சீட்டு என்று தனக்கு தெரியவில்லை என மூதாட்டி கூறவே, அவருடைய ரூமில் எந்த சீட்டு என்று நீயே பார்த்து எடுத்துக்கொள் என கூறியிருக்கிறார். வாங்கி வந்த ஆப்பிள் ஒன்றை மூதாட்டிக்கு சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொடுக்க, அந்த மூதாட்டி சாப்பிடவே சில நிமிடங்களில் சுயநினைவை இழந்து அங்கேயே மயங்கி விழுந்திருக்கிறார்.
திட்டமிட்டபடி சரியான சமயத்தை பயன்படுத்திக் கொண்ட அந்த அடையாளம் தெரியாத பெண் பீரோவில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 40 சவரன் தங்க நகைகளை சத்தமே இல்லாமல் அள்ளிக்கொண்டு மின்னல் வேகத்தில் காரில் ஏறி மாயமாகியிருக்கிறார் அந்தப் பெண்.
காரில் ஏறி மாயமான அந்த பெண் யாராக இருக்கும் என சந்தேகித்த போலீசார், அங்கிருந்த சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்த போது தான், காரில் வந்து சத்தமே இல்லாமல் பணம், மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது, சேலத்தை சேர்ந்த பிரபல கொள்ளைக்காரியான மைதிலியாகத்தான் இருக்கும் என வலுவான சந்நேகம் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மைத்திலியை பிடிக்கும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.