தருமபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி அனிதா. இந்த தம்பதியினருக்கு பிரகதிஸ்ரீ என்கிற மகள் இருக்கிறார். அங்கிருக்கும் ஒரு மழலையர் பள்ளியில் பிரகதிஸ்ரீ படித்து வருகிறார். சிறுவயதில் இருந்தே யோகா கலையை கற்றுவரும் சிறுமி அதில் பல பரிசுகளை வென்றுள்ளார். மேலும் உலக நாடுகளின் கொடியையும் திருக்குறளையும் இந்த வயதிலேயே சரளமாக கற்றுள்ளார்.

யோகா காலையில் உலக சாதனை புரிய வேண்டும் என்பதை சிறு வயதில் இருந்தே அவரது லட்சியமாக பெற்றோர் சொல்லி வளர்த்து வருகின்றனர். இதனிடையே யோகாசனம் செய்து கொண்டே திருக்குறளை ஒப்புவிக்கும் இந்த சிறுமி, உலக நாடுகளின் கொடிகளையும் தெளிவாக கூறுகிறார். பிரகதிஸ்ரீயின் இந்த திறமையை பாராட்டி இந்திய சாதனை புத்தகம் விருது வழங்கி கௌரவித்துள்ளது.

சிறுமி பயிலும் பள்ளியில் அவரது சாதனையை பாராட்டி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மற்ற மாணவர்களுக்கு யோகா கலையில் ஆர்வம் ஏற்படுத்தும் விதமாக அவர்கள் முன்னால் பிரகதிஸ்ரீயின் சாதனை நிகழ்ச்சியும் அரங்கேற்றப்பட்டுள்ளது. யோகக்கலையில் உலக சாதனை புரிய வேண்டும் என்று கூறியிருக்கும் சிறுமி பிரகதிஸ்ரீ, நன்றாக படித்து மருத்துவராகி ஏழைகளுக்கு 5 ரூபாயில் மருத்துவம் பார்க்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.