கேரளாவில் பரவியுள்ள பறவைக்காய்ச்சல் மனிதருக்கும் பரவலாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

சென்னை டிஎமஎஸ் வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்;- பிரிட்டனில் இருந்து தமிழகம் திரும்பிய 2,156 பேரில் 44 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 4 பேருக்கு உருமாறிய கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் 32 பேரின் சளி மாதிரி முடிவுகள் வரவேண்டி உள்ளதாகவும் தெரிவித்தார். புதிய கொரோனா பாதித்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஓட்டல் ஊழியர்கள் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோரிடம் கொரோனா பரிசோதனை செய்ததில் 166 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 2.5 கோடி கொரோனா தடுப்பூசி மருந்து சேமிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருந்துகளை வட்டார அளவில் கொண்டு செல்வதற்கு 2,850 மையங்கள் தயார் நிலையில் உள்ளது.  சுகாதாரத்துறை, முன்களப் பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும். பழக்கங்களை உருமாற்றாமல் இருந்தால் உருமாறிய கொரோனாவை எதிர்கொள்ள முடியும். 

மேலும், கேரளாவில் பரவியுள்ள பறவைக்காய்ச்சல் மனிதருக்கும் பரவலாம் . கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவிவரும் நிலையில் தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது. மழைக்காலம் என்பதால் டெங்கு பரவாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு 5 மடங்கு குறைந்துள்ளது.