வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 18 ,19 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. சென்னையை சுற்றியிருக்கும் பகுதிகளில் விடிய விடிய பெய்த மழையால் நகரின் முக்கிய பகுதிகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளித்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதனிடையே இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது : ஆந்திரா மற்றும் அதை ஒட்டியிருக்கும் கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

குறிப்பாக காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், வேலூர் மற்றும் சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னையை பொறுத்தவரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

இவ்வாறு வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தார்கள்.