கொரோனா வைரஸ் தாக்கவில்லை என்று சோதனை முடிவுகள் வந்தாலும் அதை முழுவதும் நம்ப முடியாது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில், கடந்த 24-ம் தேதி முதல் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 411-ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு எண்ணிக்கை 309-ஆக இருந்த நிலையில் நேற்றைய தினம் ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி மாநாட்டில் தமிழகத்தில் இருந்து 1,103 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. முடிவுகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்படுகின்றன. இந்த 411 பேரில் 364 பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


 
இந்நிலையில், பீலா ராஜேஷ் டுவிட்டர் பதிவில் கூறுகையில்;- கொரோனா அறிகுறி உள்ளவர்களை சோதிக்கும் போது  முதலில் நெகட்டிவ் என வந்தாலும் பின்னர் பாசிட்டிவ் என எந்த நேரத்திலும் மாறலாம் என்று கூறியுள்ளார். எனவே நெகட்டிவ் என வந்தவர்களையும் 28 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிப்பது அவசியம் என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.