சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் நடத்தி வரும் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் டெல்லியில் நடைபெற்று வரும் ஷாகீன் பாக் போராட்டத்தை ஒத்து இருப்பதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் இஸ்லாமியர் அல்லாத மக்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்டம் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது  என்று கூறி அவர்கள் கடந்த மூன்று மாத காலமாக நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிலும் இஸ்லாமியர்கள் தொழுகைக்கு உகந்த நாளாக கருதப்படும் வெள்ளிக்கிழமை அன்று இந்த போராட்டம் தீவிரமாக நடைபெற்றது.

பிறகு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் போராட்டம் வேகம் பெற்றது. இதே பாணியில் இந்தியா முழுவதும் ஆங்காங்கே இஸ்லாமியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் டெல்லியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ஷாகீன் பாக் எனும் இடத்தில் மட்டும் டிசம்பர் 11ந் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். பெரும்பாலும் பெண்கள் தான் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்த போராட்டம் துவங்கிய நாள் முதல் தற்போது வரை அங்கு கூட்டம் குறையவில்லை. ஷாகீன் பாக் போராட்டத்தை கலைக்க முடியாமல் டெல்லி போலீசார் திணறி வருகின்றனர். இந்த நிலையில் தான் சென்னையில் ஒரு ஷாகீன் பாக் பாணி போராட்டம் துவங்கியுள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏவுக்கு எதிராக போராட்டம் நடத்த இஸ்லாமியர்கள் அனுமதி கோரினர்.

மாலை 4 மணி முதல் 6 மணி வரை போராட்டம் நடத்த போலீசார் அனுமதி கொடுத்தனர். ஆனால் 6 மணிக்கு பிறகும் போராட்டம் நடைபெற்றது. அப்போது அங்கிருந்த போலீசார் நேரம் முடிந்துவிட்டது கலைந்து செல்லுமாறு போராட்டக்காரர்களை கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்துவிட்டனர். இதனால் அந்த இடத்தில் பதற்றம் ஏற்பட்டது. நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்தது. இதனால் காவல் உயர் அதிகாரிகள் அங்கு திரண்டனர். வடக்கு மண்டல காவல்துறை கூடுதல் ஆணையர் தினகரன் சம்பவ இடத்திற்கு வருகை தந்தார்.

அவர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த போது குறிப்பிட்ட சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போராட்டக்காரர்களை போலீசார் தாக்குவதாக அங்கு பதற்றம் ஏற்பட்டு போராட்டக்காரர்கள் போலீசாரை நோக்கி முன்னேறினர். இதனால் போலீசார் அவர்களை கட்டுப்படுத்த தடியடி நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. மேலும் அங்கு உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டு மோதல் வெடித்தது.

இதற்கிடையே சென்னையில் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டதாக கூறி தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் இறங்கினர். இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்க கூடிய பகுதிகளில் சாலை மறியல் நடைபெற்றது. ஆங்காங்கே ஆசாதி முழக்கம் முன்வைக்கப்பட்டது. நிலைமை கை மீறிச் செல்வதை அறிந்த சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உடனடியாக சென்னை வண்ணாரப்பேட்டை விரைந்தார். அங்கு அவர்கள் இஸ்லாமியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது போராட்டத்தின் போது போலீசார் தாக்கி கைது செய்தவர்களை விடுவிக்க வேண்டும் என்கிற நிபந்தனையை போராட்டக்காரர்கள் முன் வைத்தனர். உடனடியாக அதனை ஏற்ற காவல் ஆணையர், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க உத்தரவிட்டார். அவர்கள் விடுதலை செய்யப்பட்ட பிறகு போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். ஆனால் வேறு சிலர் அந்த இடத்தை அதன் பிறகு ஆக்கிரமித்தனர். இவர்கள் புதிய கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

அந்த கோரிக்கை தான் இந்த போராட்டத்தின் பின்னணியில் யார் உள்ளார்கள்? என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுநாள் வரை இஸ்லாமியர்கள் நடத்தி வந்த போராட்டத்தின் போது சிஏஏவை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தினர். ஆனால் நேற்று முதல் நடைபெற்று வரும் போராட்டத்தில் சிஏஏவுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்துள்ளனர். இதன் மூலமாகவே இந்த போராட்டம் மத்திய அரசை குறி வைத்து நடத்தப்படவில்லை, மாநிலஅரசை குறி வைத்து என்பது தெரியவந்துள்ளது.

மேலும் சட்டப்பேரவை துவங்கிய நாளில் சரியாக ஷாகீன் பாக் பாணியில் ஆசாதி முழக்கத்துடன் இஸ்லாமியர்கள் முன்னெடுத்துள்ள இந்த போராட்டத்தின் பின்னணியில் இதுநாள் வரை தமிழக சட்டப்பேரவையில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வரும் அந்த கட்சி உள்ளதாக போலீசார் கூறுகின்றனர். இது குறித்து இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து டிஜிபி மற்றும் காவல் ஆணையர் விளக்க உள்ளனர்.