4 ஆண்டுகளாக காத்திருந்து தன் மகளை அதிமுக எம்எல்ஏ பிரபு மூளைச்சலவை செய்துவிட்டார் என சவுந்தர்யாவின் தந்தை சாமிநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.

கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ பிரபுவும் சவுந்தர்யா என்ற பெண்ணும் காதல் திருமணம் செய்து கொண்டனர். அதற்கு, 19 வயது நிரம்பாத தனது மகள் சவுந்தர்யாவை கடத்தி பிரபு திருமணம் செய்ததாக பெண்ணின் தந்தை சுவாமிநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சவுந்தர்யாவை இன்று நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து இன்று சவுந்தர்யா நேரில் ஆஜராகினார். அப்போது, முழு மனதுடன் எம்.எல்.ஏவை திருமணம் செய்திருப்பதாகவும் தன்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை எனவும் சௌந்தர்யா வாக்குமூலம் அளித்தார். மேலும், தந்தை கூட இருக்க விரும்பவில்லை, கணவரும் எம்.ஏல்.ஏவுமான பிரபுவுடன் செல்ல அனுமதிக்குமாறு சவுந்தர்யா கூறியதையைடுத்து நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சவுந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன்;- நான் என் மகளிடம் பேசினேன். நான் பேசுவதை எதையுமே எனது மகள் காது கொடுத்து கேட்கவில்லை. என் முகத்தையே பார்க்கவில்லை. அந்த அளவிற்கு எனது பெண்ணை மூளைச் சலவை செய்து மனதை கலைத்துள்ளனர். எம்.எல்.ஏ.வின் முழுக் கட்டுப்பாட்டில் பெண்ணை வைத்துள்ளனர். 4 வருஷத்துக்கு முன்பிலிருந்தே காதல் என்று சொல்கிறார்கள். அப்போது என் பெண்ணுக்கு என்ன வயது இருக்கும். வழக்கை மேல்முறையீடு செய்ய உள்ளேன்.

வழக்கு போடாமல் இருக்க தனக்கு பணம் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறினார். மேலும் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட அமமுக நிர்வாகி கோமுகி மணியன், ராஜவேல் ஆகியோர் தன்னை மிரட்டியதாக புகார் தெரிவித்துள்ளார்.