மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் 4வது ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் தொடரில் தமிழ்நாட்டு வீரர் ரமேஷ் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியர் ஒருவர் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறை.

மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் 4வது ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் தொடரில், தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் ரமேஷ் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார். ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியர் ஒருவர் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.

ஆசிய சர்ஃபிங் கூட்டமைப்பு (ASF) மற்றும் இந்திய அலைச்சறுக்கு கூட்டமைப்பு (SFI) இணைந்து, தமிழ்நாடு அரசின் ஆதரவுடன் இந்த சாம்பியன்ஷிப் போட்டி ஆகஸ்ட் 3 முதல் 12 வரை நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியா, ஜப்பான், சீனா, இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட 20 ஆசிய நாடுகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்திய அணியில் எட்டு தமிழக வீரர்கள்

இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 12 வீரர்களில் 8 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கிஷோர் குமார், ஸ்ரீகாந்த், கமலி மூர்த்தி, ஸ்ரீஸ்தி செல்வம், தயன் அருண், ஹரிஷ், பிரகலாத் ஸ்ரீராம், தமயந்தி ஸ்ரீராம் ஆகியோர் இதில் அடங்குவர். மாமல்லபுரம் மற்றும் கோவளம் கடற்கரைகளில் கடுமையாகப் பயிற்சி மேற்கொண்ட தமிழ்நாட்டு வீரர்கள், உள்ளூர் அலைகளின் தன்மையை நன்கு அறிந்திருப்பதால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.

ரமேஷ் வென்ற வெண்கலப் பதக்கம்

இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் நம்பிக்கையை மெய்ப்பிக்கும் வகையில், ஆண்கள் ஓபன் பிரிவு இறுதிப்போட்டியில் தமிழ்நாட்டு வீரர் ரமேஷ், 12.60 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். இதன் மூலம், ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்தியாவிற்கான முதல் பதக்கத்தைப் பெற்று, ரமேஷ் ஒரு புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார். இது தமிழ்நாட்டு வீரர்களின் அலைச்சறுக்கு திறமையையும், கடும் உழைப்பையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.