நாய்க்குட்டி கடித்ததால் ரேபிஸ் நோய் தாக்கி உத்தரபிரதேச கபடி வீரர் பிரிஜேஷ் சோலங்கி உயிரிழந்துள்ளார்.

Uttar Pradesh Kabaddi Player Brijesh Solanki Dies Of Rabies: உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மாநில அளவிலான கபடி வீரர் பிரிஜேஷ் சோலங்கி (Brijesh Solanki). நாய்க் குட்டி கடித்து ரேபிஸ் நோயால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புலந்த்ஷாஹர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறந்த கபடி வீரரான பிரிஜேஷ் சோலங்கி சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு சாக்கடையில் விழுந்த ஒரு நாய்க்குட்டியை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அந்த நாய்க்குட்டி அவரை கடித்துள்ளது.

கபடி வீரரை கடித்த நாய்க்குட்டி

சின்ன நாய்க்குட்டி தானே கடித்துள்ளது. இது ஒரு சிறிய காயம் தானே என கருதி அவர் ரேபிஸ் தடுப்பூசி ஏதும் போட்டுக்கொள்ளவில்லை. ஆனால் நாளைடைவில் அவருக்கு ரேபிஸ் தொற்று ஏற்பட்டு, அவரது உடல்நிலை மோசமடைந்தது. அதாவது ரேபிஸ் நோயின் அறிகுறிகளான நீர்ச்சத்து குறைவு மற்றும் கடுமையான உடல் வலி ஆகியவற்றை பிரிஜேஷ் சோலங்கி அனுபவித்துள்ளார்.

பரிதாபமாக உயிரிழப்பு

ஆனால் தொடர்ந்து உடல்நிலை மோசமடைந்ததால் பிரிஜேஷ் சோலங்கி கடந்த ஜூன் மாதம் 28ம் தேதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இறப்பதற்கு முன்பாக ரேபிஸ் நோய் முற்றி படுக்கையில் அவர் அவதிப்படும் வீடியோ வைரலாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. முன்னதாக அரசு மருத்துவமனை சோலங்கிக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததாக அவரது சகோதரர் சந்தீப் குற்றம்சாட்டியுள்ளார்.

அரசு மருத்துவமனை அனுமதிக்கவில்லை

"அலிகாரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை ஒரு நாய் அல்லது குரங்கு அவரைக் கடித்திருக்க வேண்டும் என்று கூறியது. உடனடியாக அவரை அலிகார் மருத்துவக் கல்லூரி அல்லது டெல்லிக்கு அழைத்துச் செல்லும்படி எங்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. நாங்கள் அவரை மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றபோது, ​​அவர்கள் அவரை அனுமதிக்கவில்லை'' என்று சந்தீப் தெரிவித்தார்.

ஒன்றாக கபடி விளையாடுவோம்

மறுபுறம், பாதிக்கப்பட்டவரின் நண்பரான நிதின் கூறுகையில், சோலங்கி நாய்க்குட்டியை காப்பாற்றும் போது அதை கடித்ததாக ஒருபோதும் பேசவில்லை என்றும், சமீபத்தில் தான் அதன் மரணம் குறித்து அறிந்ததாகவும் கூறினார். "அந்த சம்பவம் குறித்து அவர் யாரிடமும் சொல்லவில்லை. நாங்கள் ஒன்றாக கபடி விளையாடுவோம். நாங்கள் மைதானத்தில் பயிற்சி செய்வோம். அவர் ஒரு நல்ல வீரர்" என்று அவர் தெரிவித்தார்.

தங்கப் பதக்கங்களை வென்ற வீரர்

பிரிஜேஷ் சோலங்கி மாநில அளவில் பல கபடி போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றவர். மேலும் ப்ரோ கபடி லீக் போட்டிகளில் பங்கேற்க ஆர்வமாக இருந்தார். ஆனால் நாய்க்குட்டியால் அவர் உயிரிழந்துள்ளது குடும்பத்தினரையும், கபடி ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நாய் கடித்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுவது மிகவும் முக்கியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.