இந்திய வீராங்கனை அன்னு ராணி போலந்தில் நடைபெற்ற சர்வதேச வீஸ்லாவ் மனியாக் நினைவுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

Annu Rani Won The Gold Medal In The Javelin Throw Competition: போலந்து நாட்டில் ந‌டைபெற்ற சர்வதேச வீஸ்லாவ் மனியாக் நினைவுப் போட்டியில் இந்தியாவின் ஈட்டி எறிதல் வீராங்கனை அன்னு ராணி தங்க‍ப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்தப் போட்டியில் தனது இரண்டாவது முயற்சியிலேயே 62.59 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்த அவர் இந்த ஆண்டில் தனது அதிகப்பட்ச சாதனையை பதிவு செய்துள்ளார். மேலும் இந்தப் போட்டியில் அவர் மூன்று முறை 60 மீட்டருக்கும் அதிகமாக ஈட்டியை எறிந்து அசத்தியுள்ளார்.

தங்கம் வென்ற அன்னு ராணி

கடந்த சில மாதங்களாக அன்னு ராணி சரியாக விளையாட முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார். 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிலும் அவரால் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற முடியவில்லை. இந்நிலையில் தனது கடின உழைப்பின் பலனாக இப்போது தங்கப் பதக்கத்தை அறுவடை செய்துள்ளார் அன்னு ராணி. இந்த வெற்றி அவரது மன உறுதியையும், கடுமையாக உழைக்கும் திறமையையும் காட்டுகிறது. அதன் பயனாக நல்ல முடிவு கிடைத்துள்ளது.

உலகை திரும்பி பார்க்க வைத்த தங்க மங்கை

இந்த வெற்றியின் மூலம் அடுத்த மாதம் டோக்கியோவில் நடைபெறவிருக்கும் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்கான தனது வாய்ப்புகளை அன்னு ராணி பிரகாசப்படுத்தியுள்ளார். அன்னு ராணி 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் சர்வதேச அரங்கில் தனது முத்திரையைப் பதித்தார். பின்னர் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 62.92 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்று உலகை திரும்பிப் பார்க்க வைத்தார்.

வரலாற்று சாதனை

மேலும் 2022-ல் பர்மிங்காமில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்று, காமன்வெல்த் போட்டிகளில் ஈட்டி எறிதலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையையும் அன்னு ராணி படைத்தார். ஆனால் தங்க மங்கையின் இந்த பயணம் அத்தனை எளிதானது அல்ல.

அன்னு ராணிக்கு இருந்த சவால்கள்

ஏழ்மையான விவசாய குடும்பத்தில் பிறந்த அவர் நிதி வசதி இல்லாததால் பயிற்சி எடுக்க முடியாமல் தடுமாறினார். ஈட்டி எறிதலுக்கான முறையான கருவிகள் அவரிடம் இல்லை. இதனால் அவர் விவசாய நிலங்களில் மூங்கில் மற்றும் கரும்பு குச்சிகளை ஈட்டிகளாக வீசிப் பயிற்சி மேற்கொண்டார். வயல்வெளிகளே அவரது பயிற்சி மைதானங்கள் ஆகும். கிராம மக்கள் எழுவதற்கு முன்பே அதிகாலையில் எழுந்து பயிற்சி செய்வார். கடுமையான உழைப்பும், அவரது அண்ணன் உபரேந்திரனின் ஆதரவும் அவருக்குப் பக்கபலமாக இருந்தன. தடைகள் அத்தனையும் தாண்டி இன்று தங்கம் வென்றுள்ள அன்னு ராணி இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு சிறந்த உத்வேகமாக உள்ளார்.