ஆட்கொண்டமால் கோயிலானது கால்நடைகளுக்கு காவல் தெய்வமாக இருக்கிறது. அந்த கோயிலைப் பற்றி இன்றைய தொகுப்பில் பார்க்கலாம்.
கால்நடைகளின் காவல் தெய்வம் தான் ஆட்கொண்டமால் கோயில். மலகோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோயில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் அமைந்துள்ளது. வருடத்திற்கு ஒரு சில நாட்கள் அதாவது 3 நாட்கள் மட்டுமே திருவிழா நடத்தப்படுகிறது. ஆம், தைப் பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் காணும் பொங்கல் திருநாளை முன்னிட்டு இங்கு திருவிழா நடத்தப்படுகிறது. விவசாயிகள் தங்கள் மாடுகளை கோயிலுக்கு தானமாக கொடுத்து வழிபடுகின்றனர். நேர்த்திக்கடனாக பொம்மை மாடுகளையும் வழங்குவார்கள்.
விவசாய தோழன்:
விவசாயம் உள்ளிட்ட பணிகளுக்கு துணையாக உள்ள கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக கோயிலில் வழிபாடு செய்யப்படுகிறது. இங்கு முட்புதர்களால் சூழப்பட்ட கொடிய பாம்புகள் வாழும் ஆலமரத்தின் கீழ், லிங்க வடிவில், புற்று உருவானது. அந்த காட்டுப்பகுதியில் மேயும் மாடுகள், லிங்க வடிவில் உருவான புற்றுக்கு பாலை சொரிந்து அபிஷேகம் செய்துள்ளன. தொடர்ந்து பசுக்கள் பால் சொரிவதை கண்ட முன்னோர்கள், ஆயர்பாடி கண்ணனின் மகிமை என்று உணர்ந்தனர்.ஆலம் உண்ட சிவபெருமானை குறிக்கும் லிங்க வடிவ புற்றில், கண்ணன் குடி கொண்டதால் அங்குள்ள திருமாலை "ஆல்கொண்டமால் என்று மக்கள் வணங்க ஆரம்பித்தனர்.
சிவனும், திருமாலும் ஒருங்கே அமையப்பெற்ற ஆல்கொண்டமாலுக்கு விவசாயிகள் பால், வெண்ணெய் ஆகியவற்றால், அபிஷேகம் செய்து வழிபட துவங்கினர். ஆண்டு முழுவதும் உடனிருந்து உதவி செய்யும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்துவதையும், உண்மையான உயர்வுக்கு துணை புரியும் உயிர்களை வழிபடுவதையும், இந்த கோவில்வழிபாட்டு முறை காட்டுகிறது.
