மரகத லிங்கத்தின் வரலாறு திருச்செங்கோடு ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கோயில் உடன் தொடர்புடையதாக உள்ளது. அதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில், தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற கோயிலாகும். இது சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோயில், சிவன் மற்றும் பார்வதியின் ஒன்றிணைந்த வடிவமான அர்த்தநாரீசுவரருக்காக அறியப்படுகிறது. செங்கோடு மலை உச்சியில் அமைந்துள்ள இந்த கோயில் உருவாகியுள்ளது.
மரகத லிங்கத்தின் வரலாறு
பிருங்கி முனிவர், கயிலாயம் வரும் வேளைகளில் சிவபெருமானை மட்டும் வழிபட்டு விட்டு, அவரது அருகில் இருக்கும் உமாதேவியை வழிபடாமல் விட்டு விடுவார். இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் நிலையில், சிவனை மட்டும் வணங்கும் வகையில், வண்டு வடிவம் எடுத்துச் சுற்றி வந்து வழிபடுவார். இதனால் கோபமடைந்த பார்வதி, முனிவரே! சக்தியாகிய என்னை அவமதித்ததால், நீர் சக்தி இழந்து போவீர், எனச் சாபமிட்டார்.
இதையறிந்த சிவன், நானும் சக்தியும் ஒன்றுதான். சக்தியில்லையேல் சிவமில்லை எனக்கூறி உமையவளுக்கு தன் இடப்பாகத்தில் இடம் கொடுத்தார். பார்வதி தேவி இடப்பாகம் பெறுவதற்கு இந்த மலையில் தான் வந்து தவம் புரிந்து கேதார கௌரி விரதம் இருந்து இடப்பாகம் பெற்றார். அப்படி சிவனை நினைத்து தவம் செய்யும் போது சிவபெருமான் லிங்க வடிவமாக வந்து காட்சி தந்து மறைந்தார் பின் அந்த லிங்கத்திலேயே பார்வதியும் கலந்தார். அர்த்தநாரீஸ்வர மூலவருக்கு முன்னால் மரகத லிங்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த லிங்கத்தின் அருமை அறிந்த பிருங்கி முனிவர் மலையில் தனது மூன்று காலால் நடந்தே வந்து லிங்கத்தை தரிசனம் செய்தார். தனது மூன்றாம் காலை துறந்து இழந்த சக்தியை பெற்றார். பின் அந்த லிங்கத்தை அங்கேயே நிறுவினார். பின் அந்த லிங்கத்தின் சக்தியை எடுத்துக் கூறி அதை மார்கழி மாதம் மட்டும் எடுத்து அபிஷேகம் செய்து பின் சூரியன் உதயமாவதற்குள் எடுத்து பேழையில் வைத்து விடவேண்டும் என்று தனது சீடர்களுக்கு கட்டளையிட்டார். மற்ற நேரத்தில் சாதாரணமான லிங்கத்தை வைத்து வழிபடுங்கள் என்று கட்டளையிட்டார்.
