பங்குனி மாதம் அஸ்வினி நட்சத்திரம் வரும் நாளில் கங்கை பெருகும் திருக்கடவூர் மயானக் கிணற்றில் நீராடினால் திருமணத் தடைகள் விலகும் என்று சொல்லப்படுகின்றது.
Thirukadaiyur Mayanam Brahmapureeswarar Temple Special : பொதுவாக காசிக்குச் சென்று கங்கையில் புனித நீராட வேண்டும் என்ற விருப்பம் இந்து மத மக்கள் பலருக்கும் இருக்கும். ஆனால் வசதி, வாய்ப்புகள் சிலருக்கு இடம் கொடுப்பதில்லை. இப்படிப்பட்ட பக்தர்களுக்கும் கங்கையில் நீராடிய புண்ணிய பலனை அருள வேண்டும் என்று திருவுள்ளம் கொண்ட சிவபெருமான், அந்த புண்ணிய பலனைப் அவர்கள் அடைவதற்காக தான் புனிதத்தலம் ஒன்று உள்ளது. அதுதான் திருத்தலம்தான் திருக்கடவூர் மயானம் என்ற புனிதத்தலம்.
பிரசித்திபெற்ற அமிர்தகடேஸ்வரர் கோயிலானது திருக்கடவூருக்கு அருகிலேயே அமைந்துள்ளது திருக்கடவூர் மயானம். இந்த கோயிலுக்கு வெளியில் தென்புறத்தில் பிரம்ம தீர்த்தம் அமைந்துள்ளது.
அதற்கு அருகிலேயே தான் ஒரு தீர்த்தக் கிணறும் உள்ளது. இந்தத் தீர்த்தக் கிணற்றின் புனித நீரைக் கொண்டு தான் திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரருக்கு தினமும் அபிஷேகம் செய்யப்படுகிறது. முக்கியமாக, இந்தத் தீர்த்தத்தில் பக்தர்கள் ஆண்டுக்கு ஒருமுறைதான் புனித நீராட வேண்டும். அதுவும் விசேஷமான ஒரு நாளில் மட்டுமே. அந்த விசேஷமான நாள் தான் பங்குனி மாதம் அஸ்வினி நட்சத்திரம் வரும் நாள் ஆகும்.
இதையும் படிங்க: குட் நியூஸ்.! திருச்செந்தூர் கோயிலில் இனி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை- புதிய திட்டம் அமல்
சிவத் தலங்கள்:
சிவத் தலங்களில் ஐந்து கோயில்கள், 'பஞ்ச மயான தலங்கள்' என்று அழைக்கப்படுகின்றன. அவை காசி மயானம், கச்சி மயானம் (காஞ்சிபுரம்), காழி மயானம் (சீர்காழி), நாலூர் மயானம், கடவூர் மயானம் (திருமெய்ஞ்ஞானம்) ஆகும். மயானம் என்பது பிரம்மதேவரை சிவபெருமான் எரித்து நீறாக்கிய தலங்களைக் குறிப்பதாகும். ஒவ்வொரு பிரம்ம கர்ப்பத்தின் பல யுகங்களின் முடிவில் சிவபெருமான், 'தான்' என்ற அகந்தை கொண்ட பிரம்மதேவரை எரித்துவிடுவார். அவ்வாறு சிவபெருமான் பிரம்மதேவரை எரித்த தலங்களில் ஒன்றுதான் திருக்கடவூர் மயானம் என்னும் திருமெய்ஞ்ஞானம்.
அப்படி சிவபெருமான் பிரம்மதேவரை இந்தத் தலத்தில் எரித்தபோது, தேவர்கள் அனைவரும் ஒன்றுகூடி திருக்கடவூர் மயானத்தை அடைந்து, பிரம்மதேவரை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டி பிரார்த்தனை செய்தனர். தேவர்களின் பிரார்த்தனைக்கு இரங்கிய சிவபெருமான், பிரம்மதேவரை உயிர்ப்பித்து, அவருக்குச் சிவஞானம் உபதேசம் செய்ததுடன், படைக்கும் ஆற்றலையும் அருள் புரிந்தார். பிரம்மா சிவஞானம் உபதேசம் பெற்ற தலம் திருக்கடவூர் மயானம் என்பதால், இந்தத் தலத்துக்கு திருமெய்ஞ்ஞானம் என்ற பெயர் ஏற்பட்டது.
அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் பாடப்பெற்ற தலம் இது. இந்தக் கோயிலிலுள்ள பிரம்ம தீர்த்தத்துக்கு அருகிலுள்ள கிணற்றில்தான் கங்கை பெருகியதாக ஐதிகம். என்றும் 16 வயதுடன் சிரஞ்சீவியாக இருக்கும் வரத்தை சிவனாரிடமிருந்து பெற்ற மார்க்கண்டேயர், கங்கை நீரால் சுவாமிக்கு அபிஷேகம் செய்ய விரும்பினார். மார்க்கண்டேயரின் விருப்பத்தை நிறைவேற்றத் திருவுள்ளம் கொண்ட சிவபெருமான், அந்தக் கிணற்றில் கங்கையை வரவழைத்து அருள்புரிந்தார் என்கிறது தல வரலாறு.
இதையும் படிங்க: சபரிமலை வரும் பக்தர்களுக்கு 5 லட்சம் இன்சூரன்ஸ்.! நிபந்தனைகள் தளர்வு- வெளியான புதிய அறிவிப்பு
தீர்த்தக்கிணறு:
திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் அருளால் கங்கை சங்கமித்த தீர்த்தக்கிணறு என்பதால், இந்தக் கிணற்று நீர் அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேகம் செய்ய மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கோயிலில் அருள்புரியும் பிரம்மபுரீஸ்வரருக்குக்கூட இந்தக் கிணற்று நீர் கொண்டு அபிஷேகம் செய்யபடுவதில்லை. ஒருமுறை பாகுலேயன் என்ற மன்னன் ஒருவன், இங்குள்ள இறைவன் பிரம்மபுரீஸ்வரருக்கு கிணற்று நீர் கொண்டு அபிஷேகம் செய்தான். அப்போது திடீரென்று சிவலிங்கத்தின் உச்சியில் வெடிப்பு ஏற்பட்டது. அந்தத் தழும்பு இன்றும் சிவலிங்கத் திருமேனியில் காணப்படுகிறது. எனவே, திருக்கடவூர் மயானம் இறைவனுக்குக்கூட இந்தக் கிணற்று நீரால் அபிஷேகம் கிடையாது.
பங்குனி மாதம் அஸ்வினி நட்சத்திரம்:
இந்தக் கிணற்றில்தான் பங்குனி மாதம் அஸ்வினி நட்சத்திரத்தன்று கங்கை பெருகுவதாக ஐதிகம். அன்றைக்கு மட்டுமே பக்தர்கள் கிணற்று நீரை எடுத்து புனித நீராடலாம் என்கின்றனர். இந்தக் கோயிலில் இறைவன் மேற்கு நோக்கி, திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார். அம்பிகையின் திருநாமம் அருள்மிகு நிமலகுசாம்பிகை. இந்தத் தலத்து இறைவனை வழிபட திருமணத் தடைகள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வருடத்துக்கு ஒருமுறை பங்குனி மாதம் வரும் அஸ்வினி நட்சத்திரத்தன்று இந்தக் கோயிலுக்கு வந்து புனித நீராடி இறைவனையும் இறைவியையும் மனமுருக வழிபட்டால், எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். காசிக்குச் சென்று கங்கையில் நீராடிய புண்ணியம் கிடைப்பதுடன், பித்ரு தோஷங்கள் உள்ளிட்ட சகல தோஷங்களும் விலகும் என்பது ஐதிகம். இந்தக் கோயிலில் முருகப்பெருமான் வில், அம்புடன் காட்சி அருள்கிறார். அவரை வழிபட்டால் எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். எனவே, இன்று (மார்ச்,31) நடைபெறவிருக்கும் இந்த அற்புதமான புனித நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு, புனித நீராடி இறைவனையும், இறைவியையும் வழிபட்டு அனைத்து நலன்களையும் பெறுங்கள்.
