Soil as medicine Cure Diseases Tamil : செங்கல்பட்டு மாவட்டம் திருக்கச்சூரில் அமைந்துள்ள, மண்ணையே மருந்தாக வழங்கும் அதிசயத் தலமான மருந்தீஸ்வரர் திருக்கோயில் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Soil as medicine Cure Diseases Tamil : தீராத உடல் பிணிகள் மற்றும் மனக் கவலைகள் நீங்க மருந்தீஸ்வரர் கோயிலுக்கு சென்று வந்தால் அனைத்தும் நீங்கும் என்றும் கூறப்படுகிறது. மண்ணையே மருந்தாக தரும் சிறப்பு வாய்ந்த கோயில் திருக்கச்சூர் மருந்தீஸ்வரர் கோயில். மலை மீது இருக்கும் சிவன் கோயில் சுயம்புவாக உருவாகிய லிங்க வடிவில் அமைந்துள்ளது. கோயில் பற்றி முழு விவரத்தையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கோயில் அமைவிடம்:

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே அமைந்துள்ள கோயில் தான் திருக்காச்சூர் மருந்தீஸ்வரர் கோயில். தீராத நோய்களைத் தீர்க்கும் திருத்தலமாகப் போற்றப்படுகிறது. இது சுந்தரமூர்த்தி நாயனாரால் தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டுச் சிவத்தலங்களில் ஒன்றாகும். மலை மீது அமைந்துள்ள மிகப் பழமையான மற்றும் தொன்மையான சிவன் கோயில்களில் ஒன்று. இங்கு சிவன் லிங்கமாக அருள் பாலிப்பார் இவர் சுயம்புவாக தோன்றியதாகவும் கூறப்படுகிறது.

இரட்டைத் தலம்:

திருக்கச்சூரில் இரண்டு முக்கியமான சிவத்தலங்கள் உள்ளன: ஒன்று மலையடிவாரத்தில் உள்ள ஆலக்கோயில் சிவனின் பெயர் கச்சாபேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இவர் ஆமை வடிவத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மற்றொன்று மலை மீதுள்ள மருந்தீஸ்வரர் கோயில். இவர் இந்திரனுக்கு மூலிகை மருந்து வழங்கியதால் மருந்தீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இவரது வரலாற்றை விரிவாக பார்க்கலாம்.

மருந்தாக உருவான மலையின் வரலாறு:

ஒரு முறை தேவேந்திரனுக்கு சாபத்தின் காரணமாக தீர்க்க முடியாத நோய் ஒன்று வந்தது. அவன், தன்னுடைய தேவ மருத்துவர்கள் இருவரை அனுப்பி, பலை, அதிபலை போன்ற மூலிகையை கொண்டுவர சொன்னார். பல இடங்களில் அலைந்து திரிந்து தேடியும் அந்த மூலிகைகள் கிடைக்கவில்லை. இறுதியில் தேவ மருத்துவர்கள், இந்த மலைப் பகுதிக்கு வந்தனர். இப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டதால், மூலிகைகளை அடையாளம் காண முடியாமல் அவர்கள் அவதிப்பட்டனர். இத்தல அம்மை, இருளை நீக்கி ஒளிகாட்டி அருளினார். அதன் பின்னர் தேவ மருத்துவர்கள் தங்களுக்குத் தேவையான மூலிகையை பறித்துச் சென்று இந்திரனின் நோயைக் குணப்படுத்தினர். இருளை நீக்கி ஒளி காட்டியதால், இத்தல அன்னை ‘இருள் நீக்கி அம்மை என்ற பெயரைப் பெற்றார். இறைவனும் மருந்தீஸ்வரர் எனப்பட்டார்.

மருந்தீஸ்வரரை வேண்டிக் கொள்ள கிடைக்கும் பலன்கள்:

உடல் நலமில்லாதவர்கள், பவுர்ணமி நாளிலோ அல்லது வாரந்தோறும் அல்லது பிறந்த நட்சத்திர தினத்தன்றோ இத்தலம் வந்து, கிரிவலம் வருவது சிறப்பு தரும். கிரிவலம் வரும்போது இங்கு வீசும் மூலிகைத் தென்றல் உடலையும், உள்ளத்தையும் தழுவி நோயைக் குணப்படுத்துகிறது என்பது நம்பிக்கை. மேலும் சுவாமியையும், அம்பாளையும் பிரார்த்தித்து விபூதி தரித்துக் கொண்டால், நாள்பட்ட நோய்களும், தோல் நோய்களும் குணமாகும் என்று கூறப்படுகிறது. இங்கு கொடுக்கப்படும் மண்ணை எடுத்து உடம்பிலும் நெற்றியிலும் மற்றும் நாக்கிலும் வைத்தால் அனைத்து நோய்களும் நீங்கி நோயில்லாத உடலாக காணப்படும் என்று கூறப்படுகிறது. இங்கு மண்ணையே மருந்தாகவும் விபூதியாகவும் கொடுப்பதாக கூறப்படுகிறது