சபரிமலையில் பக்தர்களைக் கையாளுவதில் குளறுபடி... ஆளுங்கட்சியை விளாசும் எதிர்கட்சி..!
மண்டல பூஜை காலம் என்பதால் சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. இதன் காரணமாக முன்பதிவு செய்த பக்தர்கள் 18 மணிநேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து சாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.
சபரிமலையில் பக்தர்களைக் கையாளுவதில் குளறுபடி ஏற்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன் குற்றம்சாட்டியுள்ளார்.
மண்டல பூஜை காலம் என்பதால் சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. இதன் காரணமாக முன்பதிவு செய்த பக்தர்கள் 18 மணிநேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து சாமியை தரிசனம் செய்து வருகின்றனர். நிலக்கல்லிலிருந்து பம்பாவுக்குச் செல்ல பேருந்து கிடைக்காத நிலை ஏற்பட்டிருக்கிறது. அனைத்து பேருந்துகளும் கூட்டமாகவே இருந்ததால் பக்தர்கள் செய்வதறியாமல் திணறுகின்றனர். சீட் பிடிப்பதற்காகக் குழந்தைகளை ஜன்னல் வழியாக பேருந்துக்குள் ஏற்றிவிட்மு முண்டியடித்துக்கொண்டு அவலக் காட்சிகளும் கண்கூடாக பார்க்க முடிகிறது.
அதேபோல், நிலக்கல்லில் குவிந்த பக்தர்களுக்குத் தண்ணீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட கிடைக்கவில்லை என பக்தர்கள் கூறிவருகின்றனர். சபரிமலையில் பக்தர்களுக்கான ஏற்பாடுகளைச் செய்வதில் அரசு தோல்வியடைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. கட்டுக்கடங்காத கூட்டம், அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் செய்யாமல் பாதியில் வீடு திரும்பும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் சபரிமலை குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆன்லைனில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன், திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த், தலைமைச் செயலாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர். டிசம்பர் 7-ம் தேதி ஒரு லட்சத்து இரண்டாயிரம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்ததுதான் கூட்ட நெரிசலுக்குக் காரணம் என முதல்வர் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக கேரள சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன் கூறுகையில்;- சபரிமலைக்கு அங்கு என்ன நடக்கிறது என்பதை அறிய, யுடிஎப் குழுவை அனுப்பியிருந்தது. அவர்கள் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர், அந்த அறிக்கையின்படி அங்கு பரிதாபமான சூழல் நிலவுகிறது. யாத்ரீகர்களை நிர்வகிப்பதில் பல்வேறு ஏஜென்சிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லை. சில பக்தர்கள் கோவிலுக்கு செல்ல 20 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. அங்கு பணியில் அனுபவம் வாய்ந்த போலீசார் இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. தேவசம் போர்டும் இதேபோன்ற புகாரையும் அளித்துள்ளதாக தெரிவித்தார்.