வைகுண்ட ஏகாதேசி.! மதுரையில் பிரசித்தி பெற்ற தல்லாகுளம் பெருமாள் கோயிலின் சொர்க்கவாசல் திறப்பு.!
108 வைணவ தலங்கள் மட்டுமல்லாது புகழ்மிக்க பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் எனும் பரமபதவாசல் திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் பெருமாளுக்கு நடைபெற்றது.
வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு மதுரை தல்லாகுளம் பெருமாள் கோயிலின் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சர்வ அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாளை ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கங்களுடன் சாமி தரிசனம் செய்தனர்.
பெருமாள் கோவில்களில் நடைபெறும் முக்கியமான விழாக்களில் வைகுண்ட ஏகாதசியும் ஒன்று. இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதையொட்டி 108 வைணவ தலங்கள் மட்டுமல்லாது புகழ்மிக்க பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் எனும் பரமபதவாசல் திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் பெருமாளுக்கு நடைபெற்றது.
மதுரையின் பிரதான பகுதியாக விளங்கும் தல்லாகுளம் பகுதியில் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் அமைந்துள்ளது. திருமலை நாயக்க மன்னரால் 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது இத்திருக்கோவில். உலகப்புகழ்பெற்ற கள்ளழகர் திருக்கோவிலின் உபகோவிலான தல்லாகுளம் பெருமாள் கோவில் பல்வேறு சிறப்புக்களை கொண்ட திருத்தலமாகும்.
இத்திருக்கோவிலில் கடந்த டிசம்பர் மாதம் 13ம் தேதி பகல்பத்து திருவிழா தொடங்கியது. நாள்தோறும் பெருமாளுக்கு பல்வேறு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அன்ன, யானை, கருட உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பெருமாள் கோவிலை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில் இன்று தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு காலை 4.30-5.10 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் மங்களவாத்தியங்கள் மற்றும் தீவட்டி பரிவாரங்களுடன் பரமபத வாசலில் எழுந்தருளினார். அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் “கோவிந்தா” எனும் கோஷம் முழங்கிட பெருமாளை தரிசனம் செய்தனர். விழாவில் மதுரையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்திருந்தனர்.