செங்கல்பட்டு திருக்கச்சூர் போன்ற பகுதிகளில் புகழ்பெற்ற மருந்தீஸ்வரர் மலை மற்றும் அதன் தெய்வீக வரலாற்றை விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே அமைந்துள்ள கோயில் தான் திருக்கச்சூர் மருந்தீஸ்வரர் கோயில். இது மலை மீது அமைந்துள்ள மிகப் பழமையான மற்றும் தொன்மையான சிவன் கோயில்களில் ஒன்று. இங்கு சிவன் லிங்கமாக அருள் பாலிக்கிறார். இவர் சுயம்புவாக இங்கு தோன்றியதாகவும் கூறப்படுகிறது.
ஒரு முறை தேவேந்திரனுக்கு சாபத்தின் காரணமாக தீர்க்க முடியாத நோய் ஒன்று வந்தது. அவன், தன்னுடைய தேவ மருத்துவர்கள் இருவரை அனுப்பி, பலை, அதிபலை போன்ற மூலிகையை கொண்டுவர சொன்னார். பல இடங்களில் அலைந்து திரிந்து தேடியும் அந்த மூலிகைகள் கிடைக்கவில்லை. இறுதியில் தேவ மருத்துவர்கள், இந்த மலைப் பகுதிக்கு வந்தனர். இப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டதால், மூலிகைகளை அடையாளம் காண முடியாமல் அவர்கள் அவதிப்பட்டனர். இத்தல அம்மை, இருளை நீக்கி ஒளிகாட்டி அருளினார். அதன் பின்னர் தேவ மருத்துவர்கள் தங்களுக்குத் தேவையான மூலிகையை பறித்துச் சென்று இந்திரனின் நோயைக் குணப்படுத்தினர். இருளை நீக்கி ஒளி காட்டியதால், இத்தல அன்னை ‘இருள் நீக்கி அம்மை என்ற பெயரைப் பெற்றார். இறைவனும் மருந்தீஸ்வரர் எனப்பட்டார்.
