Hanuman Jayanti 2022 : இன்று ஹனுமன் ஜெயந்தி! - வாயு மைந்தனை வழிபட்டு சகல சௌபாக்கியங்களையும் பெற்றிடுங்கள்!
சிவபெருமானின் அவதாரமான ஹனுமன் அவதரித்தது மார்கழி மாதம் மூலம் நட்சத்திரம், அமாவாசை திதியில். 2022 ம் ஆண்டில் இரண்டு அனுமன் ஜெயந்தியை கொண்டாடுகிறோம்.
உளுந்து, மிளகு மட்டும் சேர்த்து செய்யும் வடை ஹனுமனுக்கு மிகவும் பிரியமான ஒன்று. அந்த வடைகளை மாலையாக கோர்த்து வீட்டில் உள்ள ஹனுமன் படத்திற்கு அணிவிக்கலாம். அல்லது அருகில் உள்ள ஹனுமன் கோவிலிலும் வடை மாலை சாற்றி பூஜை செய்யலாம். வெற்றிலை, துளசி, சிறிதளவு வெண்ணெய் வைத்து ஹனுமனை வழிபடுவது சிறப்பு.
ராம காவியம் முழுமை பெறுவதற்கு முக்கியமானவர் ஹனுமன். இவரை ஆஞ்சநேயர், மாருதி, அஞ்சனை மைந்தன், வாயு புத்திரன், ராம பக்தன், வீர ஆஞ்சநேயர், பக்த ஆஞ்சநேயர் என பல பெயர்களில் நாம் அழைத்து வழிபடுகிறோம். ஹனுமனை போன்ற ஒரு சிறந்த பக்தனை, தொண்டனை உலகில் எங்கும் காண முடியாது என ஸ்ரீராம பிரானாலேயே புகழப்பெற்றவர் ஹனுமன்.
அதிவீரம், புத்தி கூர்மை, சொல் வளம், எளிமை, பக்தி இவற்றிற்கு உதாரணமாக சொல்லப்படுபவர் ஹனுமன் தான்.
ஹனுமன் ஜெயந்தி எப்போது ?
ஹனுமன் அவதரித்தது மார்கழி மாதத்தில் வரும் மூலம் நட்சத்திரம், அமாவாசை திதியில் தான். இந்த 2022-ம் ஆண்டில் இரண்டு ஹனுமன் ஜெயந்தியை வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் 02 ம் தேதியே ஒரு ஹனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்ட நிலையில், மற்றொரு ஹனுமன் ஜெயந்தி டிசம்பர் 23 ம் தேதி வெள்ளிக்கிழமையான் இன்று வருகிறது.
அமாவாசை திதி டிசம்பர் 22-ம் தேதி மாலை 06.30 மணி துவங்கி, டிசம்பர்-23 ம் தேதி மாலை 04.27 வரை அமாவாசை திதி நீடிக்கிறது. பொதுவாக எந்த ஒரு பூஜை என்றாலும் மாலையில் செய்வதை விட, காலையில் செய்வதே சிறப்பு. அதுவும் மார்கழி மாதத்தில் காலையில் விளக்கேற்றி ஹனுமனை வழிபடுவது சிறந்த பலனை தரும்.
எப்படி வழிபட வேண்டும் ?
வீட்டில் ஹனுமன் திருவுருவப் படம் இருந்தால் அதை சுத்தம் செய்து, ஹனுமனின் வால் முழுவதும் பொட்டு வைத்து வழிபட வேண்டும். ஹனுமன் படம் இல்லாதவர்கள் ஒரு மனை பலகையில் கோலமிட்டு வீட்டில் ராமாயண புத்தகம் இருந்தால் வைத்து வழிபடலாம். எதுவும் இல்லை என்றாலும், மனதார ஹனுமன் நினைத்து வழிபட்டாலே அவர் நமது பூஜையை ஏற்பார் என்கிறது ஐதீகம். சர்க்கரை பொங்கல், வடை, பாயசம் இவற்றில் ஏதாவது ஒன்றை, முடிந்தால் அனைத்தையும் நைவேத்தியமாக படைத்து வழிபடுவது இன்னும் சிறப்பு.
ஹனுமனுக்கு பிடித்த ராம நாமம்
ஹனுமனுக்கு மிகப் பிடித்த ஸ்ரீ ராம ஜெயம் என சொல்லி வழிபடலாம். ராம நாமம் ஒலிக்கும் இடத்தில் ஹனுமன் நிச்சயம் வந்து அருள் செய்வார்.
ஹனுமனை வழிபட கிடைக்கும் பலன்கள்?
ஹமனை மனதார உருகி வழிபட்டால் நினைத்த காரியம் அனைத்தையும் நடத்தி நிறைவேற்ற வைப்பார். மன தைரியத்தையும், உடல் நலத்தையும், காரிய வெற்றியையும் தரக்கூடியவர் ஹனுமன்.
ஹனுமன் ஜெயந்தியான இந்நாளில், ஹனுமனை வழிபட்டு சகல சௌபாக்கியங்களை பெற்றிடுங்கள்.