தி.மலையில் போலீசாருக்கும் பக்தர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு! தடுப்புகளை மீறி சாமி தரிசனம்! நடந்தது என்ன?
குறிப்பிட்ட வழிகளில் மட்டுமே பக்தர்களை கோவிலுக்கு செல்ல காவல்துறையினர் அனுமதித்ததால் பல இடங்களில் பக்தர்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கிரிவலம் சென்று கோவிலின் உள்ளே சாமி தரிசனம் செய்ய சென்ற பக்தர்களை கோவிலுக்கு செல்லாதவாறு தடுப்புகள் போட்டு தடுத்ததால் போலீசாருக்கும் பக்தர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நினைத்தாலே முக்தி தரக் கூடிய புண்ணிய தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலை. சிவ பெருமானின் பஞ்ச பூத தலங்களில் இது அக்னி தலமாக விளங்குகிறது. இங்கு சிவனே மலை வடிவாக காட்சி தருவதாக ஐதீகம். இங்குள்ள 14 கிலோ மீட்டர் அளவிலான சுற்றுவட்டப்பாதையில் மாதம்தோறும் வரும் பவுர்ணமி அன்று வெளியூர் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் வந்து அருணாச்சலேஸ்வரரை வழிபட்டு, அவரின் அருளை பெற்று செல்வார்கள்.
இதையும் படிங்க;- Pournami Girivalam: ஆடி மாத பவுர்ணமி.. ஓம் நமச்சிவாய என்று உச்சரித்தபடியே வெயிலில் கிரிவலம் வரும் பக்தர்கள்..!
இந்நிலையில், ஆடி மாத பவுர்ணமி நேற்று முன்தினம் அதிகாலை 3.25 தொடங்கி இன்று அதிகாலை 1.05 மணி வரை உள்ள நிலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். தொடர்ந்து இரண்டாம் நாளான நேற்றும் கொளுத்தும் வெயிலை பொறுப்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் 14 கிலோமீட்டர் கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டனர். இந்நிலையில் திருவண்ணாமலை சின்ன கடை தெருவின் வழியாக வட ஒத்தவாடை தெரு பகுதியில் அண்ணாமலையார் கோவிலுக்கு செல்லும் வழியில் பக்தர்கள் கோயிலுக்கு உள்ளே சென்று தரிசனம் மேற்கொள்வார்கள்.
ஆனால் இந்த முறை காவல்துறையினர் வட ஒத்தவாடி தெருவில் பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் நுழைய முடியாதபடி தடுப்புகள் அமைத்து பக்தர்களை சாமி தரிசனம் செய்ய கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை. மேலும் குறிப்பிட்ட வழிகளில் மட்டுமே பக்தர்களை கோவிலுக்கு செல்ல காவல்துறையினர் அனுமதித்ததால் பல இடங்களில் பக்தர்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக வட ஒத்தவாடை தெருவின் வழியாக அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக பக்தர்கள் கடும் வெயிலில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டது.
இதையும் படிங்க;- என்னது.. இனிமே திருப்பதி லட்டு முன்பு மாதிரி இருக்காதா? அதிர்ச்சியில் பக்தர்கள்?
இதனால் பக்தர்கள் காவல்துறையினர் அமைத்த தடுப்புகளை உடைத்துக் கொண்டு உள்ளே செல்ல முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பக்தர்களுக்கும் மற்றும் காவல் துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.