குலதெய்வம் நம் வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்ய வேண்டும் என்றால் குலதெய்வ கோயிலில் இருந்து ஐந்து பொருட்களை மறக்காமல் எடுத்து வர வேண்டும். அந்த பொருட்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
குலதெய்வ வழிபாடு
குலதெய்வம் என்பது ஒரு குடும்பத்தின் ஆணிவேர் போன்றது. நாம் எத்தனை தெய்வங்களை வழிபட்டாலும் நம் முன்னோர்கள் வழி வழியாக வணங்கி வந்த குலதெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே நம் குடும்பம் செழிப்பாக இருக்கும் என்பது ஐதீகம். பல காரணங்களால் குலதெய்வம் நம் வீட்டை விட்டு விலகி இருக்க வாய்ப்பு உண்டு. நம் வீட்டில் குலதெய்வம் நிரந்தரமாக குடியிருந்து நம்மை காக்க வேண்டும் என்றால் குலதெய்வத்தின் கோவிலில் இருந்து ஐந்து முக்கிய பொருட்களை எடுத்து வர வேண்டும். அந்த பொருட்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மண்
குலதெய்வம் கோவிலுக்கு சென்று வீடு திரும்பும் பொழுது அங்கிருந்து ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து வந்து சிகப்பு அல்லது மஞ்சள் துணியில் கட்டி சந்தனம், குங்குமம் இட்டு அதை வீட்டில் நுழைவாயில் அல்லது பூஜை அறையில் வைத்து விட வேண்டும். குலதெய்வ கோவிலின் மண்ணுக்கு அவ்வளவு சக்தி உண்டு. இந்த மண்ணை நம் நிலை வாசலில் கட்டி வைக்கும் பொழுது துஷ்ட சக்திகள் நம் வீட்டை அண்டாது. வீட்டில் உள்ள தீய சக்திகளும் வெளியேறிவிடும்.
அடுத்தமுறை குலதெய்வ கோயிலுக்கு செல்வதற்கு முன்னர் இந்த மண்ணை ஆற்றில் கரைத்து விட்டு மீண்டும் புதிய மண்ணை எடுத்து வர வேண்டும். ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். வீட்டில் குலதெய்வத்தின் மண்ணை வைத்திருக்கும் சமயம் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். நாள் தவறாமல் பூஜைகளை செய்ய வேண்டும். மீறினால் கஷ்டம் ஏற்படக்கூடும்.
எலுமிச்சை பழம்
குலதெய்வ கோயிலின் மண்ணை பாதுகாப்பாக வைத்திருக்க முடியாதவர்கள் அல்லது நாள் தவறாமல் பூஜை செய்ய முடியாதவர்கள் எலுமிச்சம் பழத்தை வாங்கி வரலாம். குலதெய்வத்தின் மடியிலிருந்து அல்லது பாதத்தில் வைத்து வழிபட்ட எலுமிச்சம்பழத்தை அதேபோல் சிகப்பு அல்லது மஞ்சள் துணியில் கட்டி சந்தனம், குங்குமம் வைத்து நிலை வாசல் அல்லது பூஜை அறையில் வைத்து விடவும்.
மாணவர்கள் படிக்கும் மேசைகள், தொழில் செய்யும் இடங்கள் ஆகியவற்றிலும் எலுமிச்சம்பழத்தை வைத்து விடலாம். இவ்வாறு செய்வதால் குடும்பத்தில் அமைதி நிலவும். பிரச்சனைகள் ஏற்படாது. கண் திருஷ்டிகள் அகலும். காரியத்தில் ஏற்படும் தடைகள் விலகும். செல்வம் பெருகும்.
சாம்பல்
கோவில் திருவிழாக்களின் போது நடைபெறும் தீமிதி நிகழ்வுகளில் பயன்படுத்தப்படும் சாம்பலை எடுத்து வரலாம். இதை பூஜை அறையில் திருநீறுடன் கலந்து வைத்துக் கொண்டு தினமும் நெற்றியில் பூசி வரலாம். இதன் காரணமாக கண் திருஷ்டிகள் விலகும். எதிரிகளின் பார்வையில் இருந்து தப்பிக்க முடியும். சாம்பல் கிடைக்காதவர்கள் குலதெய்வ கோவிலில் வழங்கப்படும் திருநீறு பிரசாதத்தை வீட்டில் உள்ள திருநீறுடன் கலந்து பயன்படுத்தலாம்.
சந்தனம்
குலதெய்வ கோயிலில் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தப்படும் சந்தனத்தை எடுத்து வந்து வீட்டில் பயன்படுத்தலாம். செவ்வாய், வெள்ளி அல்லது நல்ல நாட்களில் சந்தனத்தை சிறிது ஜவ்வாது பொடியுடன் கலந்து தண்ணீரில் கரைத்து வீடு முழுவதும் தெளித்து விடலாம். நிலைவாசல், பூஜையறை ஆகிய இடங்களிலும் சந்தனத்தை தடவி குங்குமம் வைத்து வழிபடலாம். இவ்வாறு செய்வது வீட்டில் அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும், மகாலெட்சுமி கடாக்ஷத்தையும் வரவழைக்கும்.
தாலி சரடு
குலதெய்வ கோவிலுக்கு செல்லும் சுமங்கலி பெண்கள் மஞ்சள் கயிறை வாங்கி அதை சுவாமியின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து வாங்கி வந்து வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். தாலிச்சரடை மாற்றும் பொழுது இந்த கயிறை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு செய்வது பெண்களுக்கு சுப பலன்களை தரும். கணவன் மனைவிக்கிடையே இருக்கும் பிரச்சனைகள் தீரும். தீர்க்க சுமங்கலி பாக்கியமும், கணவருக்கு நீண்ட ஆயுளும் கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)


