1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த 14 அடி உயர அத்தி மரத்தால் உருவான வானமுட்டி பெருமாள் ஆலய தை பிரம்மோற்சவ கொடியேற்றம் ஆலய கொடிமரத்தில் கருட கொடியேற்றப்பட்டு துவங்கியது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த கோழிகுத்தி என்ற கிராமத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீனிவாச பெருமாள் என்கிற வானமுட்டி பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. மூலவர் 14 அடி உயரத்தில் மிக பிரமாண்டமான அத்தி மரத்தால் இயற்கையாக உருவானவர். பிப்பில மகரிஷி வழிபட்டு சனி கவசம் பாடிய இந்த ஆலயத்தில் கிபி ஏழாம் நூற்றாண்டு துவங்கி பல்வேறு சோழ மன்னர்களின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. மூன்றாம் குலோத்துங்க சோழன் இந்த ஆலயத்திற்கு வழங்கிய கொடைகள் பற்றிய கல்வெட்டுகளும் உள்ளன. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வருகின்ற பிப்.27ல் இடைத்தேர்தல்

பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின் தை பிரமோற்சவ கொடியேற்று விழா இன்று துவங்கியது. இதனை முன்னிட்டு உற்சவர் சீனிவாச பெருமாள் பூதேவி ஸ்ரீதேவி சமேதராய் உள்பிரகாரம் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து கொடி மரத்திற்கு எதிரே எழுந்தருளிய பெருமாளுக்கு தீபாராதனை செய்யப்பட்டது அதனை அடுத்து செப்பு தகடுகள் பதிக்கப்பட்ட ஆலய கொடிமரத்தில் கருட கொடி ஏற்றப்பட்டது. 

முன்னதாக ஆலயத்தின் எட்டு திக்கிலும் சக்கரத்தாழ்வார் எழுந்தருள திக்பலி அளிக்கப்பட்டு, கொடி மரத்திற்கு பால் பன்னீர் இளநீர் சந்தனம் உள்ளிட்ட திரவியப் பொடிகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. இறுதியாக கொடி மரத்திற்கும் பெருமாளுக்கும் மகாதீப ஆராதனை செய்யப்பட்டது திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். ஐந்து நாட்கள் நடைபெறும் பிரமோற்சவ விழாவில் தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலாவும் 20ஆம் தேதி முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் 22ஆம் தேதி தேர் உற்சவம் ஆகியவை நடைபெறுகிறது.