Asianet News TamilAsianet News Tamil

மூலதன லாப வரி என்றால் என்ன? அந்த வரியை எப்படிக் கணக்கிடுவது?

What is the capital gains tax Determining how the line
what is-the-capital-gains-tax-determining-how-the-line
Author
First Published Apr 4, 2017, 12:47 PM IST


ஒரு சொத்தைப் பத்தாண்டுகளுக்கு முன்பு ஒரு தொகைக்கு வாங்கி, அதை இப்போது விற்கும்போது, குறிப்பிட்ட அளவு லாபம் கிடைக்கும் அல்லவா? அந்த லாபத்துக்கு வரி செலுத்த வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

அந்த வரிக்கு மூலதன லாப வரி என்று பெயர். அதென்ன மூலதன லாப வரி? அந்த வரியை எப்படிக் கணக்கிடுவது?

மூலதன வரி:

ஒருவர் தன் வீட்டை விற்று அதன் மூலம் கிடைக்கும் லாபத்துக்கான வரியே மூலதன வரி.

இந்த வரியில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று, நீண்டகால மூலதன வரி. இரண்டாவது, குறுகிய கால மூலதன வரி.

நீண்ட கால மூலதன வரி

உதாரணத்துக்கு ஒருவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய வீட்டை, இப்போது விற்கிறார் என வைத்துக்கொள்வோம். அதிலிருந்து கிடைக்கும் லாபத்துக்கு நீண்ட கால மூலதன லாபம் என்று பெயர். இந்தத் தொகைக்கு 20 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.

குறுகிய கால மூலதன வரி

ஒருவர் மூன்று ஆண்டுகளுக்குக் குறைவான காலத்தில் வாங்கிய ஒரு வீட்டை, இப்போது விற்கும்போது, கிடைக்கும் லாபத்துக்கு குறுகிய கால மூலதன லாபம் என்று பெயர்.

நீண்ட கால மூலதன லாபத்துக்கு உள்ள வரியைப் போல் அல்லாமல், வருமான வரி செலுத்தும் அளவிலேயே வரியைச் செலுத்த வேண்டும்.

இது சுமார் 15 சதவீதம் என்ற அளவில் இருக்கும். அதெல்லாம் சரி, வீட்டை விற்பதன் மூலம் கிடைத்த லாபத்தை எப்படிக் கணக்கிடுவது?

லாபம் கணக்கீடு

வழக்கமாக லாபத்தை எப்படிக் கணக்கிடுவோம்? வாங்கிய விலையில் இருந்து விற்கும் விலையைக் கழித்தால் வரும் மீதமே லாபம் அல்லவா? ஆனால், நீண்டகால மூலதன லாபம் இந்த முறையில் கணக்கிடப்படாது. இதற்கு இண்டக்ஸ் முறை பயன்படுத்தப்படுகிறது.

அப்படியனால், இண்டக்ஸ் முறை என்றால் என்ன? இந்த இண்டக்ஸ் குறியீடு அட்டவணை பண வீக்கத்தைக் கணக்கில் கொண்டே தயாரிக்கப்படுகிறது. பண வீக்கம் உயர்ந்தால் விலை உயரும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதை அடிப்படையாகக் கொண்டே இண்டக்ஸ் குறியீடு தயாரிக்கப்படுகிறது.

இண்டக்ஸ் குறியீடு

இண்டக்ஸ் முறை இப்போது அமல்படுத்தப்பட்டதல்ல. 1981-ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. 1981-82 நிதியாண்டில் இந்த இண்டக்ஸ் குறியீடானது 100 புள்ளிகளாக எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதற்கு அடுத்த ஆண்டு, அதாவது 1982-83 நிதியாண்டில் இண்டக்ஸ் 109 புள்ளிகளாக உயர்ந்தது. அப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து தற்சமயம், அதாவது 2016- 17-ம் நிதியாண்டில் இண்டக்ஸ் 1125 உயர்ந்துள்ளது. கடந்த 35 ஆண்டுகளில் சுமார் 12 மடங்கு அளவுக்கு இண்டக்ஸ் உயர்ந்துள்ளது.

லாபம் எவ்வளவு?

சரி, இப்போது நாம் லாப கணக்குக்கு வருவோம். உதாரணத்துக்கு நீங்கள் 1990-ம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு வீடு வாங்கியதாக வைத்துக்கொள்வோம். அப்போது அதன் விலை ரூ. 3 லட்சம். இப்போது அதை ரூ. 30 லட்சத்துக்கு விற்கிறீர்கள் எனக் கொள்வோம். அவருக்குக் கிடைக்கக்கூடிய நீண்ட கால மூலதன லாபம் எவ்வளவு இருக்கும்?

1990-ல் இண்டக்ஸ் புள்ளிகள் 182.

வாங்கிய விலை ரூ. 3 லட்சம்.

தற்போதைய இண்டக்ஸ் புள்ளிகள் 1125.

விற்ற விலை ரூ. 30 லட்சம்.

கிடைக்கக்கூடிய லாபம்

ரூ.3,00,000 * 1125 / 182 = ரூ.18,54,395

பணவீக்கத்தின் அடிப்படையிலான வீட்டின் விலை = ரூ.18,54,395

அப்படியானால், நீண்ட கால மூலதன லாபம் = 30,00,000 – 18,54,395 = ரூ.11,45,605

1990-ம் ஆண்டு வாங்கி, இப்போது விற்ற வீட்டின் மூலம் உங்களுக்குக் கிடைத்த லாபம் ரூ.11,45,605. இந்தத் தொகைக்குத்தான் நீங்கள் வரி செலுத்த வேண்டும். இந்த வரியைச் செலுத்தாமல் இருக்க ஒரு வழி உள்ளது.

பழைய வீட்டை விற்றதன் மூலம் கிடைத்த நீண்ட கால மூலதன லாபத்தைக் கொண்டு இரண்டு ஆண்டுகளுக்குள், ஒரு புதிய வீடு வாங்கினால், அந்த மூலதனத்துக்கு வரி செலுத்த வேண்டியதில்லை.

ஒரு வேளை வீடு வாங்க விரும்பவில்லையெனில், குறிப்பிட்ட முதலீட்டுத் திட்டங்களில் அதை முதலீடாகச் செலுத்தினால் வரி செலுத்த வேண்டியதில்லை. இதிலும் ஒரு நிபந்தனை உள்ளது. அது என்னவென்றால், அந்த முதலீட்டுத் திட்டம் 3 ஆண்டுகளுக்கானதாக இருக்க வேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios