சென்னையில் தனியாக மனை வாங்கி வீடு கட்டுவது என்பது சிரமமானது. அதற்கு ஆகும் செலவுகூட மிக அதிகம். அதனால், அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்குவதே சென்னையில் எதார்த்தமானதும், சுலபமானதும் கூட.

சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் என்னென்ன வகைகளில் இருக்கிறது? உங்களுக்கு ஏற்ற அடுக்குமாடிக் குடியிருப்பு எது?

சென்னயில் அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாங்கும் மக்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

  1. ரூ. 25 இலட்சத்துக்குள் வீடு வாங்கும் கீழ்ப் பிரிவு நடுத்தர மக்கள்,
  2. ரூ. 50 இலட்சத்துக்குள் வீடு வாங்கும் நடுத்தர மக்கள்,
  3. சுமார் ரூ. 55 இலட்சம் முதல் 80 இலட்சம் வரையிலான வீடு வாங்கும் உயர் நடுத்தர மக்கள்,
  4. எல்லா வசதிகளையும் விரும்பும் உயர் வகுப்புப் பிரிவினர் (எலைட் பிரிவினர்).

சென்னையில் மத்திய சென்னை மற்றும் மத்திய சென்னையை ஒட்டியுள்ள தி.நகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், மயிலாப்பூர், அண்ணா நகர், கே.கே. நகர், மாம்பலம், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, திருவான்மியூர், பெசன்ட் நகர் போன்ற பகுதிகளில் அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டின் விலை கோடிகளில் இருக்கும்.

இந்தப் பகுதிகளில் நடுத்தர, உயர் நடுத்தர மக்கள் வீடு வாங்குவது என்பது மிகவும் கடினம்.

நடுத்தர, உயர் நடுத்தர மக்கள் பெரும்பாலும் இரண்டு படுக்கையறைக் கொண்ட வீடுகள், வீடு ஒட்டு மொத்தமாக 700 முதல் 800 சதுர அடியில் இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.

இந்த வகையில் உள்ள வீடுகள் பெரும்பாலும் ரூ. 50 இலட்சத்துக்குள் விற்கப்படுகின்றன. சராசரியாக ரூ. 45 இலட்சம் முதல் 50 இலட்சத்துக்குள் விற்பனையாகின்றன.

இந்த அளவுக்குள் விற்பனையாகும் வீடுகள் குன்றத்தூர், வேளச்சேரி, ஓஎம்ஆர், மடிப்பாக்கம், ஐயப்பன்தாங்கல், அம்பத்தூர், ஆவடி, போரூர், பூந்தமல்லி, தாம்பரம், சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம் போன்ற பகுதிகளில் கிடைக்கும்.

உயர் பிரிவு மக்கள் விரும்பும் எலைட் பிரிவு வீடுகள் சென்னையில் பல இடங்களிலும் பரவலாக விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கோடி ரூபாய் முதல் அதற்கும் அதிகமாக இந்தப் பிரிவில் வீடுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்தப் பிரிவு வீடுகள் வாங்குவோரின் ஒரே எண்ணம் எல்லா வசதிகளும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்பதே. அப்படிக் கிடைத்துவிட்டால் எந்தப் பகுதியாக இருந்தாலும் விலையைப் பற்றி கவலைப்படாமல் வாங்கிவிடுகின்றனர்.

இதில் ரூ. 25 இலட்சத்துக்குள் வீடு வாங்கும் பிரிவினர் என்பது எப்படியும் ஒரு சொந்த வீடு இருந்தால் போதும் என்று நினைப்பவர்களே. இந்தத் தொகைக்குப் பெரும்பாலும் ஒரு படுக்கையறை கொண்ட வீடுகளே சென்னை நகருக்குள் கிடைக்கும். அதுவும் சென்னையின் புறநகர்ப் பகுதிகளில்தான் கிடைக்கின்றன. எனவே சொந்த வீட்டுத் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காக இந்தப் பிரிவு மக்கள் ஒரு படுக்கையறை வீட்டை வாங்குகிறார்கள்.

இப்படி வீடு வாங்கும் பிரிவினர் அலுவலகத்தை விட்டு தூரமாக இருந்தாலும் வீடு வாங்கி விடுகிறார்கள். ஆனால், குடும்ப உறுப்பினர்களின் தேவையான பள்ளிக்கூடம், கல்லூரிக்கு முக்கியத்துவம் கொடுத்தே இடத்தைத் தேர்வு செய்கிறார்கள்.

மேலும் பல அடுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் இவர்களது விருப்பத் தேர்வாக இவர்களிடம் இருப்பதில்லை. பெரும்பாலும் அதிகபட்சமாக 15 - 20 வீடுகளை மட்டுமே வைத்து கட்டும் அடுக்குமாடிகள் அல்லது 6 முதல் 8 வரையுள்ள சிறு அடுக்குமாடி வீடுகளையே வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள்.

பிரிக்கப்படாத மனையில் கிடைக்ககூடிய பாகத்தையும் (யூடிஎஸ்) மனதில் கொண்டே வீடு வாங்குகிறார்கள்.

இப்போ உங்கள் நேரம் நீங்கள் எந்த வகையான வீடுகளை வாங்க விரும்புகிறீர்கள்…