Three houses ready for two hours Chinas record
சீனாவின் சான்ஷி மாகாணத்தில் மூன்று மணி நேரத்தில் இரண்டடுக்கு வீடு அமைத்து சாதனை நிகழ்த்தியுள்ளனர்.
"வீடு" அடிப்படைத் தேவை வரிசையில் முக்கியமானது. இதனை நன்கு உணர்ந்துள்ளது கம்யூனிச நாடான சீனா. அதன் விளைவு மூன்று மணிநேரத்தில் இரண்டடுக்கு வீடு கட்டி ஒரு கட்டுமான நிறுவனம் அசத்தியுள்ளது.
சீனாவின், சான்ஷி மாகாணத்தில் ஸியான் என்ற இடத்தில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளது.
இந்த வீட்டைக் கட்ட கட்டுமான நிறுவனம் ‘3-டி பிரிண்டிங்’ தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளது. அதற்கான மாடல்கள் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டன.
அதிநவீன தொழில்நுட்ப முறையில் வீடு கட்ட சதுர மீட்டருக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவாகியதாகக் கூறப்படுகிறது.
வீட்டின் வடிவமைப்பு உருவாக்கப்பட்டு ‘கிரேன்’ மூலம் தூக்கி பொருத்தப்பட்டது.
இந்த வீடு சமையலறை, படுக்கையறை, ஓய்வு அறை மற்றும் ஹால் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
தொழிற்சாலை மற்றும் விவசாய கழிவுகளின் மூலப் பொருட்கள், கட்டுமான பொருட்களாக பயன்படுத்தப்பட்டன.
இதுபோன்ற வீடு கட்டுவதன் மூலம் போக்குவரத்து, ஆட்கள் கூலி, பொருட்கள் போன்றவற்றின் செலவு குறையும். கால நேரமும் மிச்சமாகும் என்பதால் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மூன்று மணி நேரத்தில் இரண்டடுக்குகளுடன் கட்டப்பட்ட இந்த வீடு 9 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டாலும் அதைத் தாங்க கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது தான் ஹைலைட்.
