உங்களிடம் இருக்கும் சொத்துப் பத்திரங்கள் சட்டப்படி பத்திரமாக வைக்க என்ன செய்ய வேண்டியவை

பதிவு

பத்திரங்கள் மூலமாக ஒருவரது விருப்பம், எண்ணம் போன்றவை செயலாக்கம் பெறப்பட்டு உயிரூட்டும் விதமாக சட்டபூர்வமாக செல்லத்தக்க விதத்தில், ஆவணங்களாக ஏற்படுத்தப்பட்டு, மோசடிகளை தவிர்க்கும் விதமாக ஒரு நபருக்கு ஒரு சொத்து எந்த பிரச்னையுமின்றி, பிறர் உரிமை கோராதவாறு அந்த நபரை சென் றடைவதற்கு வழிவகை செய்து தருவதே பதிவு எனப்படும்.

ஒரு சொத்தை, கிரயத்தொகையான பிரதிபலனை (Sale Consideration) கொடுத்து, விற்பவர் உங்கள் பெயருக்கு எழுதிக்கொடுத்து, உங்கள் பெய ருக்கான உரிமை மாற்றம் (Title Transfer) செய்து கொடுத்து, அந்த பதிவு முடிந்தபின் சில வாரங்களில் சம்மந்தப் பட்ட பதிவு அலுவலகம் சென்று பதிவு செய்யப்பட்ட கிரயப் பத்திரத்தினை (Sale Deed) திரும்பப் பெறுதல் வேண்டும்.

அந்த கிரயப் பத்திரத்துடன் நகல் சேர்த்து பதிவு செய்யப்பட்டிருப்பின், அதனையும் மறக்காமல் திரும்பப் பெறுதல் வேண்டும். இப்போது உங்கள் சொத்துக்கான ஒரிஜினல் பத்திரங்கள் உங்கள்வசம் வந்துவிடும்.

எப்படி பத்திரப்படுத்துவது

பத்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காக பத்திரங்களை லேமினேஷன் செய்தல்கூடாது. ஆவணங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி விடும். ஆவணங்களை தனித்தனியே பிரித்து, தைத்து வைத்தல் நல்லது. ரப்பர் பேண்ட், கிளிப்புகள் போன்றவைகளைத் தவிர்த்துவிடுவது நல்லது.

அடுத்து, ஆவணங்களை பாலித்தீன் கவரில் போட்டு, அதற்குள் அந்து ருண்டை போன்ற ரசாயன பொருட்களைப் போட்டு வைப்பதன் மூலம் ஆவணங்கள் பாழ்படும் அபாயம் அதிகம்.

பத்திரங்களை சாதாரண ஃபைல்களில் வைத்து பத்திரப்படுத்துவதே நல்லது. முடிந்தால் அனைத்து ஆவணங்களையும் தேதிப்படி வரிசைப்படுத்தி, பென்சிலால் பக்க எண்கள் கொடுத்து வைக்கலாம்.

பயணங்களின் போது, ஒரிஜினல் மற்றும் இதர பத்திரங்களை பத்திரமாக கையாள்கிறோம் என சுமந்து செல்வதை தவிர்த்தல் வேண்டும். அடிக்கடி பத்திரங்களை எடுத்து, நல்ல சூரிய வெளிச்சத்தில் ஒவ்வொரு தாளாக, தனித்து, பிரித்து, சிறிது நேரத்துக்குப் பிறகு மீண்டும் அவ்வாறே பத்திரப்படுத்தி வைத்தாலே போதுமானது.

வங்கி லாக்கர்களில் வைக்கப்பட்டுள்ள ஆவணங்களை, ஆண்டுக்கு இரண்டு முறையாவது இவ்வாறு, எடுத்து, வெளி உலகை காட்டிய பின்பு மீண்டும் பெட்டகப்படுத்தலாம்.

பத்திரப்பதிவு முடிந்தபின்னர், சம்பந்தப்பட்ட பதிவகம் சென்று பதிவு செய்யப்பட்ட பத்திரத்தினை திரும்ப பெறுதல் வேண்டும். சில நாட்களுக்குப்பின் அதே பதிவகத்தில், உங்கள் பத்திரத்தின் பதிவு எண்ணை குறிப்பிட்டு, ஒரு சான்றிட்ட நகல் (Certified Copy of Sale Deed) வேண்டி மனு கொடுத்து, அதனை அந்த அலுவலகத்திலிருந்து, பத்திரத்தில் சான்றிட்ட நகலாக தருவதை பெற்று, ஏற்கனவே பதிவுசெய்து திரும்பப் பெற்றிருந்த ஒரிஜினல் ஆவணத்துடன் ஒப்பிட்டு பார்த்துக்கொள்தல் நல்லது.

தற்போது, உங்கள் சொத்துக்கான பத்திரங்களைப் பொறுத்தமட்டில் உங்களது கிரயப்பத்திரம் பாதுகாக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது. இப்போது, கிரயப் பத்திரத்தின் ஜெராக்ஸ் நகல் ஒன்றினை சம்பந்தப்பட்ட வருவாய் அலுவலகத்தில் சமர்ப்பித்து, உங்கள் சொத்துக்கான வரி விதிப்பினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

காலி இடம் என்றாலும் சரி, கட்டப்பட்ட வீடு என்றாலும் சரி, அதன் அளவுக்கேற்பவும், சொத்து அமைந்துள்ள கிராமம், அமைவிடம், போன்றவைகளுக்கேற்பவும் சொத்து வரி விதிப்பு செய்யப்படும்.

நீங்கள் வாங்கிய சொத்துக்கான வரிவிதிப்பு உங்கள் பெயருக்கு ஏற்படுத்துவதும் உங்கள் உரிமையை நிலைநாட்டக்கூடிய ஒரு கூடுதல் ஆவணமே. எனவே, நம் சொத்துதானே, பதிவு செய்யப்பட்ட கிரயப்பத்திரம்தான் நம் வசம் உள்ளதென பலகாலம் பார்க்காமல் இருக்கும் பட்சத்தில், ‘கிணத்தை காணோம்’ என்று நீங்களும் கூப்பாடு போடத் தான் வேண்டியிருக்கும்.