சென்னை நகருக்குள் கட்டப்படும் எந்த கட்டிடங்களாக இருந்தாலும் மண் மற்றும் நீர் பரிசோதனை பரிசோதனைகள் மிகவும் முக்கியம். இதுதான் கட்டிடத்தின் பாதுகாப்புக்கு உறுதுணையாக இருக்கும்.

சென்னை நகருக்குள் கட்டப்படும் கட்டிடங்கள் எந்த வகையாக இருந்தாலும் முதலில் அந்த இடத்திலுள்ள மண்ணின் தன்மையையும், நீரின் தன்மையையும் பரிசோதனை செய்த பின்புதான் கட்டிடங்களைக் கட்டவேண்டும் என்பது கட்டிட வல்லுனர்களின் ஒருமித்த கருத்தாகும். 

அந்த சோதனைகளின் அடிப்படையில்தான் நமது கட்டுமான வேலைகளை அமைத்துக்கொள்ள வேண்டும்.

கட்டிட அடித்தளம்  

பரிசோதனைகள் எதுவும் செய்யப்படாமல் அமைத்த கட்டிடங்கள், எவ்வளவு நல்ல தரமான கட்டுமானப் பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டிருந்தாலும் அதன் நீடித்து உழைக்கும் தன்மைக்கு அவ்வளவு உத்தரவாதம் இருக்காது.

கட்டிடத்தின் அடித்தளம் அமைப்பதைப் பொறுத்தே அதன் உறுதியையும், நீண்டநாள் உழைப்பையும் முடிவு செய்ய முடியும். அதனால் எப்படிப்பட்ட அடித்தளத்தை நாம் அமைப்பது என்பதை மண் மற்றும் நிலத்தடி நீர் பரிசோதனைகளுக்கு பிறகு முடிவு செய்ய வேண்டும்.

மண் பரிசோதனை 

அந்தப் பகுதியில் நாம்தான் முதலில் வீடு கட்டப் போகிறோம் என்றால் அந்த சோதனைகள் அவசியமாகும். நாம் கட்டுவதற்கு முன்பே அங்கு வீடுகள் இருந்தால் அவற்றைக் கட்டியவர்கள் எந்த முறையிலான அடித்தளம் அமைத்துள்ளார்கள், அந்த பகுதியில் உள்ள மண்ணின் தன்மைகள் என்ன என்ற தகவல்களை கேட்டு அறிந்து கொள்ளவேண்டும்.

மண் பரிசோதனை செய்வதால் கட்டிடத்தின் மொத்தச் செலவில் குறிப்பிடத்தக்க அளவு குறைப்பதற்கும், கட்டிடத்தின் அடித்தளம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றி தெளிவாக திட்டமிடுவற்கும் உதவியாக இருக்கும். மனையில் உள்ள மண்ணின் தாங்குதிறன் குறைவாக இருப்பதாக அறிந்தால் அங்கே மண்ணை உறுதிப்படுத்தும் முறைகளை கையாள வேண்டும்.

மண் பரிசோதனை என்பது மண்ணின் தன்மைகளையும், அதன் கட்டமைப்புகளையும் ஆராய்வது மட்டுமல்லாமல் மண்ணின் ஈரம், அதன் அமிலத்தன்மை மற்றும் அதிலுள்ள வேதியியல் பொருட்களின் கலப்புகள் உள்ளிட்ட பல்வேறு விதமான தகவல்களை உள்ளடக்கியது. 

அஸ்திவாரம் அமைப்பதில் என்னென்ன தொழில்நுட்பங்களைக் கையாளவேண்டும் என்பதையும் தெளிவுப்படுத்தும். அந்தத் தகவல்களின் அடிப்படையில் பொறியாளர்கள் கட்டிடத்தின் அஸ்திவாரம், அதன் சுவர்கள் மற்றும் அதன் மேற்புறக்கட்டமைப்புகள் அனைத்தையும் முடிவு செய்வார்கள்.

வீடு கட்டப்போகும் இடம் ஈரப்பதத்துக்கு ஏற்ப சுருங்கி விரியும் களிமண் பூமியாகவோ அல்லது மண்ணின் அடுக்குகள் வெவ்வேறு விதமாக அமைந்தோ, பாறைகள் அவ்வளவு வலுவாக இல்லாமலோ அல்லது  ஈரத்தன்மை அதிகம் உள்ள நிலமாகவோ இருந்தால் அங்கே எப்படிப்பட்ட கட்டுமானத்தை அமைக்க வேண்டும் என்பதை பொறியாளர்கள்தான் முடிவு செய்ய இயலும்.

நீர் பரிசோதனை

மண் பரிசோதனை போலவே மனையின் நிலத்தடி நீரையும், பரிசோதனை செய்து கொள்வது முக்கியம். மனையில் வீடு கட்ட ஆரம்பிக்கிறோம் என்றால், முதலில் ஆழ்துளைக் கிணறு அமைத்து, அதில் கிடைக்கும் தண்ணீரை கட்டிட வேலைகளுக்கு பயன்படுத்துகிறோம். அந்த தண்ணீரில் கலந்துள்ள வேதிப்பொருட்கள் கட்டிடத்தின் தரத்தை பாதிக்கக் கூடியதன்மை பெற்றவையாகும்.

பரிசோதனைகளின் மூலம் அந்த நிலத்தடி நீரானது கட்டுமான வேலைகளுக்கு பொருந்தாது என்பது தெரியவந்தால், தண்ணீருக்கு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்வதே பாதுகாப்பாகும். கட்டுமான வேலைகளுக்காக கட்டிடப் பொறியாளரை அல்லது மேஸ்திரிகளை அணுகும்போது மண் மற்றும் நிலத்தடி நீர் பரிசோதனை பற்றி கலந்து பேசி அதன்படி திட்டமிட வேண்டும். 

மண்ணின் தரத்தையும், நீரின் தரத்தையும் வெறும் கண்களால் மட்டுமே பார்த்து முடிவு செய்துவிட முடியாது. நாம் வாங்குவது அடுக்குமாடி வீடாக இருந்தால் அங்கே மண் பரிசோதனைகள் செய்யப்பட்ட விபரங்களைக் கேட்டு அறிவதோடு அந்தச் சோதனைகளின் நகல்களையும் பார்த்து கொள்வது நல்லது.