Asianet News TamilAsianet News Tamil

புதிய வீடுகளில் சோலார் மின்சாரம் அமைக்க இவைதான் அடிப்படை…

Solar system in houses
solar system-in-houses
Author
First Published Apr 10, 2017, 2:15 PM IST


 

புதிதாக கட்டப்படும் வீடுகளில் சூரிய தகடு (சோலார்) மின்சாரம் அமைக்க சில அடிப்படை விவரங்கள் இதோ!

மின் பயன்பாடு இயல்பாகவே கோடைக்காலத்தில் அதிகமாகும். அதே சமயம் மின்சார உற்பத்தி அதிகரிக்கப்போவதில்லை. இந்தக் கோடைக்காலம் மட்டுமல்ல பொதுவாக நமது வீட்டின் மின் தேவையைச் சமாளிக்க நமக்கு இயற்கையே தரும் ஒரு வழிதான் சூரிய மின்னாற்றல்.

பொதுவாக இன்றைக்குப் பெரும்பாலும் பல வீடுகளில் இன்வெட்டர் பொருத்தி இருக்கிறார்கள். மின்சாரம் இல்லாத நேரத்தில் இன்வெட்டரை வைத்துச் சமாளித்து வருகிறார்கள். ஆனால் இந்த இன்வெட்டரில் சேமிக்கப்படும் மின்சாரம் என்பது மின் வாரியம் மூலமாக நமக்குக் கிடைக்கும் மின்சாரம்தான். அதைத்தான் சேமித்துப் பயன்படுத்திவருகிறார்கள்.

ஆனால், இந்த சூரியத் தகடு (Solar Panel) மின் பற்றாக்குறையையும் சமாளிக்க உதவும். சூரியத் தகடு மற்றும் அதற்கான சார்ஜ் கன்ட்ரோலர் என்ற இயந்திரம் ஆகிய இரண்டையும் மட்டும் வாங்கி மாட்டினால் நமது மின்தேவையில் ஒரு பகுதியை சூரிய ஒளியின் மூலம் தயாரித்துக் கொள்ள முடியும்.

உலகிலேயே இந்தியாவில்தான் வருடத்திற்கு அதிகபட்சமாக 300 நாட்கள் முழு அளவிற்கு சூரிய வெளிச்சத்திலிருந்து மின்சாரம் தயாரிக்க முடியும்.

சாதாரணமாக ஒரு வீட்டில் இன்வெட்டர் வைக்கும்போது மின்சாரம் இல்லாதபோது 2 ஃபேன்கள் 3 லைட்டுகளை 3 அல்லது 4 மணிநேரம் இயங்குவது மாதிரி வைப்பது வழக்கம். இதற்கு ஒரு 150 எ.ஹெச் பேட்டரி மற்றும் 850 வி.ஏ இன்வெர்ட்டர் சரியாக இருக்கும்.

சூரியத் தகடு வைக்க இதை இரண்டு 150 எ.ஹெச் பேட்டரிகள் மற்றும் 1000 வி.ஏ இன்வெர்ட்டராக மாற்ற வேண்டும். இதற்குச் சற்றுக் கூடுதலாகச் செலவாகும்.

1 கேவி சூரியத் தகடு பயன்படுத்த இந்த பேட்டரி மற்றும் இன்வெர்ட்டர் போதுமானது. 1 கேவி என்பது 1000 வாட்ஸ். இந்த 1000 வாட்ஸ் பேனலில் தினந்தோறும் 5 யூனிட் வரை மினசாரம் சேமிக்க முடியும்.

இரண்டு மாதத்துக்கு ஒரு முறை மின்கட்டணம் கணக்கிடுவதால் 60 தினங்களுக்கு நாம் 300 யூனிட்கள் வரை மிச்சப்படுத்தலாம்.

1000 வாட்ஸ் சூரிய சக்தி பேனல் வாங்க அதன் தயாரிப்பு நிறுவனத்தைப் பொறுத்து விலை விகிதம் மாறுபடும் சராசரியாக ஒரு யூனிட் சூரியத் தகடு ரூ. 40 முதல் ரூ. 60 வரை இருக்கும். இதன் ஆயுள் காலம் சுமார் 15 முதல் 20 ஆண்டுகளாகும். நாம் பயன்படுத்தும்

பேட்டரி மற்றும் இன்வெர்ட்டர்களின் ஆயுள் காலம் அந்தந்த நிறுவனத்தைப் பொறுத்து 2 முதல் 4 ஆண்டுகாலம் இருக்கும். பேட்டரி மற்றும் இன்வெர்ட்டர்களை 3 அல்லது 4 வருடங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டியதிருக்கும்.

ஆனால் சூரியத் தகடு 15 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என்பதால் நமது முதலீடு கண்டிப்பாக லாபத்தையே தரும் என உறுதியாக நம்பலாம். சூரியத் தகடு சார்ஜ் கன்ட்ரோலரின் விலையும் அதன் நிறுவனத்தைப் பொறுத்து அமையும். இதுவும் சாராசரியாக ரூ.2000 முதல் 5000 வரை இருக்கும். தற்போது சார்ஜ் கன்ட்ரோலருடன் இணைந்த இன்வெர்ட்டர்களும் கிடைக்கின்றன.

சூரியத் தகடு பொருத்தினால் லாபமா நஷ்டமா என்று கேள்வி வரும். அதைப் பார்ப்போம். 1000 வாட்ஸ் சூரியத் தகடு இணைப்பு கொடுத்த வீட்டுக்கு ஒரு நாளைக்கு சுமார் 5 யூனிட் மிச்சமாகும் என்று கணக்கிட்டால் ஒரு மாதத்திற்கு 150 யூனிட். வருடத்துக்கு 1800 யூனிட். 20 வருடத்துக்கு 36,000 யூனிட். சராசரியாக ஒரு யூனிட்டுக்கு ரூ.4 என்று கணக்கிட்டால் (20 வருடங்களுக்குப் பிறகு யூனிட் கண்டிப்பாக இதைவிட அதிகமாகத்தான் இருக்கும்) ரூ1 லட்சத்து 44 ஆயிரம் மிச்சமாகும்.

இதில் நமது இன்றைய செலவு என்று பார்த்தால் சுமார் 60 ஆயிரம் மட்டும்தான் (கண்டிப்பாக அனைவரும் தங்களது வீட்டில் இன்வெட்டர் வைத்திருப்பார்கள் என்ற அனுமானத்தில் சூரியத் தகடு மற்றும் சார்ஜ் கன்ட்ரோலர் செலவு மட்டும்). ஆனால் சூரியத் தகடு பொருத்தும் பட்சத்தில் அதிகபட்சமாகத் தொடர்ந்து 4 மணிநேரம் மின்சாரம் தடைப்பட்டாலும் இந்த சூரியத் தகடு மின்சாரம் தடைப்படாமல் வரும் என்பதை நிச்சயமாச் சொல்லலாம்.

பகல் முழுவதும் பராமரிப்புப் பணிக்காக மின்சார வாரியம் மின்சாரத்தை நிறுத்தினால் பகலில் 2 ஃபேன்களை தொடர்ந்து 7 முதல் 9 மணிநேரம் வரை பயன்படுத்த முடியும்.

பல லட்சக் கணக்கில் வீடு கட்டும்பொது, சில ஆயிரங்களை சோலாருக்காக பயன்படுத்தினால் மின் கட்டணத்தில் இருந்து நாம் பெரிதும் சம்பாதிக்கலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios