நிலத்திற்கு அடுத்தபடியாக சொந்த வீடு கட்டுவோர்களுக்கும், கட்டுநர்களுக்கும், கான்ட்ராக்டர்களுக்கும் காஸ்ட்லியான விஷயம் கட்டுமானப் பொருட்கள் தான்.

தேவைக்கேற்ப கொள்முதல் செய்வது, சரக்கிருப்பை வைத்துக் கொள்வது தொடர்பான முக்கிய டிப்ஸ்களை இங்கு காண்போம். இவை ஸ்டோர் கீப்பர்களுக்கும், பர்ச்சேஸ் மேனேஜர்களுக்கும் பயன்படக்கூடியது.

1.. கிடங்கில் சரக்கிருப்பு வைத்துக் கொள்வது என்பது மட்டும் மெட்டீரியல் மேனேஜ்மென்ட் ஆகிவிடாது. தேவைக்கு மிகுதியான இருப்பும் கூடாது, பற்றாக்குறையும் ஏற்படக்கூடாது என்கிற இரு புள்ளிகளுக்கு இடையே பயணிப்பது என்பதுதான் உண்மையான மெட்டீரியல் மேனேஜ்மென்ட்.

2. தகுந்த நபர் துணை கொண்டு, ஒரு கட்டுமானத்திற்குத் தேவையான மொத்த கட்டுமான பொருட்களையோ அல்லது குறிப்பிட்ட காலத்திற்குத் தேவையான கட்டுமான பொருட்களையோ மிகத் துல்லியமாகக் கணக்கிட்டு, முன்கூட்டியே வாங்கி பாதுகாப்பான முறையில் வைத்திடல் வேண்டும்.

3. அதிகம் கிடைக்காத அல்லது கிடைப்பதற்கு அரிய பிராண்டின் பொருட்களை முன்கூட்டியே தேவையான அளவில் வாங்கி வைத்திடல் வேண்டும்.

4. நமது தேவையை அறிந்து, அதற்கேற்ப உடனே மெட்டீரியலை சப்ளை செய்யும் டீலர்களுடன் பல தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

5. ஒரு குறிப்பிட்ட பிராண்டின் பொருளை வாங்குவதற்கு முன் அதன் நிறை குறைகளை ஆராய வேண்டும். அதன் போட்டிப் பொருளோடு ஒப்பிட வேண்டும்.

6. சரக்கு என்பதின் எதிர் காரணி விலை ஆகும். எனவே, சரக்கினை வாங்குவதற்கு முன்பு அதன் விலை பற்றி பல தடவை யோசித்திடல் வேண்டும். இவற்றைப் பற்றிய சரியான கணக்கிடல் இருந்தால் மட்டுமே நம்மால் முழுக் கட்டுமானத்தையும் சிரமமின்றி முடிக்க இயலும்.

7. தேவை ஏற்படுகிற போது மட்டுமே சரக்கினை வாங்குவது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட முறையாகும். நம்முடைய தவறான யூகங்களின் காரணமாக, பொருளை வாங்கி குவித்து வைப்பது ஒரு வித மறைமுக வட்டியில்லாத முதலீடு ஆகும். இது நமக்கு நஷ்டத்தினை ஏற்படுத்தும்.

8. நமக்கு 45 முதல் 90 நாட்கள் கடனில் தருவதாக கடைக்காரர் அல்லது டீலர்கள் சொல்லலாம். அப்போது, அவர்கள் மொத்தத் தொகைக்கு வட்டி வசூலிக்கிறார்களா? என்பதை நன்கு விசாரியுங்கள்.

9. ரொக்கப்பணம் கொடுத்து வாங்குவதற்கும், கடனில் வாங்குவதற்கும் விலை வித்தியாசம் இருக்கிறதா? என்பதை விசாரியுங்கள்.அந்த வேறுபாடு அதிகமாக இருந்தால், நீங்கள் ரொக்கப்பணம் கொடுத்தே பொருட்களை வாங்க முயற்சிக்கலாம். ஆனால், அதற்கு முன்பாக வட்டிக் கணக்கீடு அவசியம்.

10. சிக்கனப்படுத்துகிறேன் என்பதற்காக, மட்டமானப்பொருட்களைப் பயன்படுத்தாதீர்கள். பெரும்பாலும் வீடு கட்டுபவர்கள் தங்கள் வீடுகளுக்கு நல்ல தரமான டைல்களும், கேபிள்களும் வாங்குவார்கள்.

வாடகைக்கு விடும் வீடுகளுக்கு மட்டமான நான் பிராண்டட் டைல்ஸ் பெயிண்ட் மற்றும் கேபிள்களைப் போட்டு விடுவார்கள். அவர்கள் மூன்று ஆண்டு காலம் இருந்துவிட்டுச் சென்ற பிறகு, நாம் போய் பார்த்தோமெனில் வீடு அலங்கோலமாக இருக்கும். திரும்பவும் நாம் அவற்றைச் சரி செய்ய செலவழிக்க வேண்டும்.