Asianet News TamilAsianet News Tamil

டைல்ஸ்-ன் வகைகள்; உங்க வீட்டுக்கு ஏற்றதை நீங்களே தேர்வு செய்யலாம்…

Picture of tiles You can choose suitable for your home
picture of-tiles-you-can-choose-suitable-for-your-home
Author
First Published Mar 6, 2017, 1:47 PM IST


ஒரு வீட்டை சிமெண்ட், செங்கல், கம்பி, மணல் தாங்கிக் கொண்டிருந்தாலும் வீட்டை அழகாகக் காட்டுபவை டைல்ஸ், பர்னிச்சர்கள், மின்சாதனப் பொருட்கள்தான். அந்த வகையில் வீட்டுக்கு அத்தியாவசியத் தேவையாகிவிட்டது டைல்ஸ்.

பொதுவாக, டைல்ஸ் ரகத்தில் பல வகைகள் உண்டு. செராமிக், நேச்சுரல் ஸ்டோன், கிளாஸ், மொசைக் மற்றும் போர்சிலின் என ரகங்கள் அதிகம் உண்டு. இதில் எந்த இடத்துக்கு எந்த டைல்ஸ்களைத் தேர்வு செய்ய வேண்டும்?

போர்சிலின்

வீட்டைக் கட்டும்போதே ஏற்ற அந்தப் பகுதிக்கு எந்த மாதிரியான டைல்ஸ்களைத் தேர்வு செய்வது நல்லது. இது வீட்டின் அழகை மட்டுமின்றி, அதில் வசிக்க உள்ள குடும்பத்திற்கான வசதியையும் அதிகரிக்கும்.

பொதுவாக வரவேற்பறையில் பயன்படுத்துவதற்கு அதிக ஸ்திரத்தன்மையும், நீடித்த ஆயுளும் கொண்ட டைல்ஸ் ரகங்களைத் தேர்வு செய்வதே நல்லது. குறிப்பாகப் போர்சிலின் (Porcelain) ரக டைல்ஸ் மிகச் சரியான தேர்வாக இருக்கும்.

போர்சிலின் ரகத்துக்கும் செராமிக் டைல்ஸ் ரகத்துக்கும் இடையே சில வித்தியாசங்கள் உள்ளன. ஆனால், இவை இரண்டும் ஒன்றுதான் எனப் பலரும் தவறாக நினைக்கிறார்கள். போர்சிலின் ரக டைல்ஸ், செராமிக்கைவிட விலை அதிகமானது.

தரத்திலும், செராமிக்கை விட சிறந்தது. தண்ணீரைக் குறைவாக உறிஞ்சும் திறன்கொண்டது என்பதால், அதில் நடப்பவர்கள் எளிதில் வழுக்கி விழ மாட்டார்கள். எனவே, குளியலறைக்கும் இந்த வகை டைல்ஸ்களைப் பயன்படுத்தலாம்.

கிளாஸ் டைல்ஸ்

இந்த வகை டைல்ஸ் ஈரத்தை உறிஞ்சாது. எனவே இதையும் குளியலறைகளில் பயன்படுத்தலாம். சுத்தப்படுத்துவதும் எளிது. பலரும் இதனைச் சமையலறையை அலங்கரிக்கவும் பயன்படுத்துகின்றனர்.

கிளாஸ் டைல்ஸில் வாடிக்கையாளர் விரும்பும் வண்ணத்தில் ஓவியங்கள் அல்லது உருவங்களைச் சுலபமாக உருவாக்கலாம். எனவே, சமையலறை மற்றும் குளியலறையை அலங்கரிக்க விரும்புபவர்கள் கிளாஸ் டைல்ஸைத் தேர்ந்தெடுக்கலாம்.

செராமிக்

செராமிக் ரக டைல்ஸ் விலை குறைவானது. வீட்டின் அழகை மெருகேற்றவும் செய்யும். ஆனால், போர்சிலின் டைல்ஸ் அளவுக்கு ஈரத்தை உறிஞ்சாது. இதைச் சமையலறை, குளியலறையில் பயன்படுத்த முடியும்.

பூஜை அறையின் பக்கவாட்டுச் சுவர்களிலும் பயன்படுத்தலாம். குறைவான விலை என்பதால், மலிவு விலை வீடுகள், பட்ஜெட் வீடுகள் கட்டுபவர்கள் இதைப் பயன்படுத்தலாம்.

நேச்சுரல் ஸ்டோன் டைல்ஸ்

இந்த வகை ரகம் பார்ப்பதற்கு மிகவும் எளிமையாக இருக்கும். ஆனால், நீடித்து உழைக்கக் கூடியது. வீட்டுக்குள் மட்டுமின்றி, வெளிப்புறப் பகுதிகளிலும், வீட்டின் சுற்றுச்சுவரை ஒட்டிய நடைபாதை, தோட்டத்துக்கான வழித்தடம் ஆகியவற்றில் பயன்படுத்தலாம்.

நடுத்தர விலைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்த நேச்சுரல் ஸ்டோன் டைல்ஸ் அதிக வெப்பம் அல்லது பனிப் பொழிவைத் தாங்கக்கூடியது. எனவே இதன் ஆயுள் காலம் மற்ற ரக டைல்ஸ்களைவிட அதிகம். ஆனால், இயற்கையான முறையில் உருவாக்கப்படுவதால், இந்த ரக டைல்ஸ்களில் உருவம் அல்லது நிற ஒற்றுமை பெரும்பாலும் இருக்காது.

இந்த டைல்ஸைச் சொர சொரப்பான தன்மை உடையதாகவும் மாற்ற முடியும். குளியலறைக்குப் பயன்படுத்தும்போது சொரசொரப்பான நேச்சுரல் ஸ்டோன் டைல்ஸைப் பயன்படுத்துவது சிறந்தது.

மொசைக்

மொசைக் டைல்ஸ் வகைகள் பண்டைய காலம் முதலே பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு ரகம். வீட்டுக்குள்ளே இயற்கைக் காட்சிகள் அல்லது ஓவியங்களை மாட்டி வைப்பதற்குப் பதிலாக, சுவரில் பதிக்கும் கற்கள் மூலமாகவே அதனை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டதுதான் மொசைக் டைல்ஸ்.

தற்போது இதன் தயாரிப்பில் பெரும் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இந்த வகை டைல்ஸ்கள் வழுக்கும் தன்மை உடையவை. எனவே பூஜை அறையில் கடவுள் படங்களை ஓவியம் போல் வடிவமைக்கவும், சமையலறையில் இயற்கை காட்சிகளை உருவாக்கவும் இந்த மொசைக் டைல்ஸைப் பயன்படுத்தலாம்.

தற்போது மொசைக் டைல்ஸில் போட்டோ பிரிண்டட் டிஜிட்டல் டைல்ஸும் வந்து விட்டது. ஒரு புகைப்படத்தைப் பிரிண்ட் செய்தால் எப்படித் துல்லியமாகக் கிடைக்குமோ அதே போல், உங்கள் வீட்டுச் சுவரிலும் அதன் உருவத்தைப் பதியலாம். குழந்தைகளுக்கான அறையில் போட்டோ பிரிண்டட் டிஜிட்டல் டைல்ஸ் மூலம் அவர்களின் புகைப்படங்களைச் சுவராகவே உருவாக்கி விடலாம்.

ஸ்டெய்ன் ஃப்ரீ டைல்

வீட்டின் சமையலறைக்குப் பயன்படுத்த உகந்த டைல்ஸ் இது. காபி கொட்டினாலும், எண்ணெய் சிந்தினாலும் இந்த வகை டைல்ஸ்களை எளிதாகச் சுத்தப்படுத்திவிடலாம். இதைத் தவிர கீரல்களை தவிர்க்கும் ஸ்கிராப் ஃப்ரீ டைல்ஸ் ரகங்களும் இப்போது சந்தையில் கிடைக்கின்றன.

வரவேற்பறை அல்லது வீட்டின் ஹாலில் அதிக எடையுள்ள சோபா போன்ற பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு நகர்த்தும்போது டைல்ஸ்களில் கீறல் விழுவதைத் தவிர்க்க இதைப் பயன்படுத்தலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios