Asianet News TamilAsianet News Tamil

வீட்டில் இன்வர்ட்டர் பராமரிப்பு பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்…

It is important to know about home care invarttar
it is-important-to-know-about-home-care-invarttar
Author
First Published Mar 13, 2017, 1:42 PM IST


இருபது நாட்கள் குடும்பத்தோடு வெளியூர் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது நண்பருக்கு. ஃபிரிட்ஜில் பல பொருள்கள் இருந்தன. மின் இணைப்பைத் துண்டித்து விட்டால் அவை கெட்டுப்போய் விடும். எனவே அவர் வீட்டுக்கான மின் இணைப்பை ஆஃப் செய்யாமல் கிளம்பினார்.

20 நாட்களுக்குப் பிறகு வந்தபோது வீட்டில் எந்த வித்தியாசத்தையும் அவர் உணரவில்லை. இரு நாட்களுக்குப் பிறகு வீட்டில் மின்வெட்டு. அவர் பெரும் அதிர்ச்சியடைந்தார். மின்வெட்டு நேர்ந்ததற்காக அந்த அதிர்ச்சி அல்ல.

வீட்டில் அவர் இன்வர்ட்டர் ஒன்றை நிறுவியிருந்தார். மின்வெட்டு ஏற்பட்டாலும் தொடர்ந்து பத்து மணி நேரத்திற்காவது வீட்டின் சில விளக்குகளும், மின்விசிறிகளும் இயங்கும். காரணம் அவை அந்த இன்வர்ட்டருடன் இணைக்கப்பட்டிருந்தன.

மாலை வேலையில் மின்வெட்டு. அந்த மின்வெட்டு மூன்று மணி நேரத்துக்குத் தொடர்ந்தது. தவிர உடனடியாக அனுப்ப வேண்டிய சில மின்னஞ்சல்களையும் அவரால் அனுப்ப முடியவில்லை. தவித்து விட்டார்.

அடுத்த நாள் இன்வர்ட்டர் குறைபாட்டைச் சரி செய்ய டெக்னீஷியன் ஒருவரை அழைத்து வந்தார். விவரத்தைக் கூறியவுடன் அவர் கூறிய முக்கிய ஆலோசனைகள் எல்லோருக்குமே பயனுள்ளதாக இருக்கும்.

“அதிக நாட்கள் வீட்டை பூட்டிக் கொண்டு செல்கிறீர்கள் என்றால் மின் இணைப்பைத் துண்டிக்கவில்லை என்றாலும் இன்வர்ட்டரின் முன்புறம் காணப்படும் வட்ட வடிவ சுவிட்சை ஆஃப் செய்து விடுங்கள். இல்லையென்றால் பாட்டரி மிகவும் பலவீனமடைந்துவிடும்”

இன்வர்ட்டர் பராமரிப்பு தொடர்பாக நாம் அறிந்து கொள்ள வேண்டிய வேறு சில தகவல்கள்:

சிலர் ஃப்ரிட்ஜ், தொலைக்காட்சி, ஏ.சி.போன்றவற்றையெல்லாம் இன்வர்ட்டர் இணைப்பில் வைத்திருக்கிறார்கள். இது விரும்பத்தக்கதல்ல. அதிகமான லோடு என்றால் மின்சுற்று பாதிக்கப்படும். எனவே மின் விளக்குகள், மின் விசிறிகளுடன் மட்டுமே இன்வர்ட்டரை இணையுங்கள்.

இன்வர்ட்டர் பாட்டரியில் போதிய நீர் இருக்கிறதா என்பதை அவ்வப்போது சரிபார்த்துக்கொள்ளுங்கள். அதற்காகக் கிட்டத்தட்ட காலியாகும் நிலையில்தான் நிரப்ப வேண்டும் என்பதல்ல. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பார்த்து எவ்வளவு குறைந்திருக்கிறதோ அந்த அளவுக்கு நீரை நிரப்புங்கள். இங்கே நீர் என்பது குழாய் தண்ணீர் அல்ல. வடிகட்டிய நீர். Distilled water எனப்படும் இது பெட்ரோல் பங்குகளிலும் கிடைக்கிறது.

இந்த நீர் எப்போது ‘பேக்’ செய்யப்பட்டிருக்கிறது என்பதைக் கவனியுங்கள். அந்தத் தேதிக்கு சுமார் ஒரு மாதத்துக்குப் பிறகு அது தன் தனித்தன்மையை இழந்துவிட வாய்ப்பு உண்டு. எனவே, பல டிஸ்டில்ட் வாட்டர் பாட்டில்களை வாங்கி வீட்டில் சேமிக்க வேண்டாம் (ஒரு முக்கியக் குறிப்பு: வடிகட்டிய நீர்தானே’ என்று நினைத்து இதைக் குடித்துவிடாதீர்கள். இது வேறு வகையானது).

இன்வர்ட்டரில் கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்புகள் (இவற்றை டெர்மினல்கள் என்பார்கள்) டைட்டாக இருக்கிறதா என்பதை அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ளுங்கள். இந்த இணைப்புகள் லூசாக இருப்பதன் காரணமாக இன்வர்ட்டர் இயக்கத்தில் பிரச்சினைகள் தோன்றலாம்.

கொடுத்து வைத்த சில பகுதிகளில் மாதக் கணக்கில் மின்வெட்டே இருக்காது. அப்படிப்பட்டவர்கள் 40 நாட்களுக்கு ஒரு முறை மின் இணைப்பை ஐந்து நிமிடமாவது ஆஃப் செய்துவிட்டு இன்வர்ட்டரை ஓடவிடுங்கள்.

பேட்டரியில் தண்ணீர் குறையும்போது நீங்கள் அதில் தண்ணீர் விடுங்கள். அப்படி விட்ட பிறகு இன்வர்ட்டரை ஆஃப் செய்துவிட்டு பிறகு ஆன் செய்யுங்கள். இல்லையென்றால் பேட்டரியின் திறமை குறையும்.

பேட்டரியை வருடத்திற்கு ஒருமுறை அதற்கான சேவை மையத்தில் கொடுத்து கந்தக அமிகத்தை (Sulfuric acid) மாற்றிக் கொள்ளுங்கள். இல்லையென்றால் மின்வெட்டின்போது தொடக்கத்தில் எட்டு மணி நேரத்துக்கு மின் சக்தியை அளிக்கும் இன்வர்ட்டர்கள் ஏழு, ஆறு, ஐந்து என்று குறையத் தொடங்கும்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios