Asianet News TamilAsianet News Tamil

வீட்டு மனையில் முதலீடு செய்பவர்கள் கவனத்திற்கு…

investors in-real-estate-attention
Author
First Published Jan 8, 2017, 9:23 AM IST


வீடு கட்டுவதற்கு மட்டுமல்ல அதனை முதலீட்டாகவும் பார்த்தே வீட்டு மனைகள் வாங்கப்படுகின்றன. வீடு கட்டுவதற்காக வாங்கும்போது சில ஆண்டுகள் கழித்தோ அல்லது ஓய்வு காலத்திலோ வீடு கட்டிக்கொள்ளலாம் என்ற நோக்கமும் உண்டு.

எனவே வீடு கட்டி குடியேறும்போது அந்த பகுதியில் உள்ள போக்குவரத்து, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் போன்ற வசதிகள் எப்படி இருக்கக்கூடும் என்று முன்கூட்டியே ஓரளவுக்கு ஊகித்துக் கொள்ள முடியும்.

முதலீட்டு நோக்கத்தில் வீட்டுமனை வாங்கும்போது அந்த பகுதியில் தொழிற்சாலைகள் ஏதேனும் வர இருக்கிறதா, உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட இருக்கிறதா என்பதை அறிந்துகொண்ட பிறகே வாங்க வேண்டும்.

இந்த வசதிகள் வர இருப்பதால் வீட்டுமனையின் மதிப்பு உயருமா அல்லது வீட்டுமனையின் மதிப்பு குறையுமா என்பதையும் உறுதி செய்து கொள்வது அவசியம்.

தொழிற்சாலைகள் ஒரு பகுதியில் அமையும்போது அங்கு குடியிருப்பு வசதிகளும் உருவாகும் என்பது உண்மைதான். ஆனால் சில சமயங்களில் தொழிற்சாலைகளின் அருகில் உள்ள பகுதிகள் குடியிருப்புக்கு ஏற்றதாக அமையாலும் போய்விடக்கூடும். எனவே அங்கு வர இருக்கிற வசதிகள் வீட்டுமனை மதிப்பில் எந்த வகையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை பல கோணங்களில் இருந்தும் விசாரித்து அறிந்துகொள்வது நலம்.

முக்கியமாக அந்த பகுதியில் வீட்டுமனை வாங்குபவர்கள் அங்கேயே வீடு கட்டிக் கொள்ளும் விருப்பத்தோடு வாங்குகின்றனரா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு பகுதியில் எல்லோரும் முதலீட்டு நோக்கத்திலேயே மனைகளை வாங்கி, யாருமே வீடு கட்டாவிட்டால் அந்த பகுதியில் நிலமதிப்பு உயர்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

குழந்தைகளின் உயர்கல்வி, திருமணம் ஆகிய சமயங்களில் உதவக்கூடும் என்ற திட்டத்தோடு வீட்டுமனையில் முதலீடு செய்யும்போது இன்னும் கூடுதல் கவனம் தேவை.

உயர்கல்வி அல்லது திருமணத்திற்கான செலவுகள் எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு தேவைப்படும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, பத்து ஆண்டுகளுக்கு பிறகு உயர்கல்விக்கான செலவுகள், பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு திருமணத்திற்கான செலவுகள் என்று திட்டமிட்டால் அந்த குறிப்பிட்ட ஆண்டுகளுக்குள் நிலத்தின் மதிப்பு உயர்வதற்கு உறுதியான வாய்ப்புகள் உள்ளதா என்று தெரிந்துகொள்ள வேண்டும்.

நிலத்தில் செய்யப்படும் முதலீடு நிச்சயமாக இலாபகரமானது. ஆனால் அதிலிருந்து கிடைக்கும் இலாபம் தேவையான நேரத்தில் உதவியாக இருக்குமா என்பதில் வீட்டுமனை வாங்குபவர்தான் கவனமாக இருக்க வேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios