Asianet News TamilAsianet News Tamil

பாகப்பிரிவினை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை…

inheritance and-forced-you-to-know-about
Author
First Published Jan 25, 2017, 3:24 PM IST


”தந்தை வழி சொத்தில் வாரிசுகளுக்குக் கிடைக்கும் சொத்துரிமைதான் பாகப்பிரிவினை.

அதாவது, குடும்பச் சொத்து உடன்படிக்கை பத்திரம். குடும்ப உறுப்பினர்கள் சம்மதத்தின்பேரில் சமமாகவோ அல்லது வாரிசுகள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் விதமாகப் பிரித்துக் கொள்ள முடியும்.

பூர்வீகச் சொத்துக்களை வாரிசுகளுக்கு சமமாகப் பிரிக்கப்படாதபட்சத்தில் அல்லது அவர்களில் யாரேனும் ஒருவருக்கு ஆட்சேபனை இருந்தால் பாகப்பிரிவினையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம்.

ஒருவருக்கு நான்கு வாரிசுகள் இருந்து, அதில் மூன்று வாரிசுகளுக்கு மட்டும் பாகம் பிரிக்கப்பட்டு, ஒரு வாரிசுக்கு மட்டும் பாகம் கிடைக்கபெறாமல் இருந்தால், அந்தப் பாகப்பிரிவினை செல்லாது என அவர் நீதிமன்றத்தை நாடலாம். பாக பிரிவினை பதிந்திருந்தால் பின்னால் பிரச்சினை ஏற்படாது.

தான பத்திரம்..!

சொத்து உரிமை மாற்றம் செய்து தருவதில் உள்ள ஒருமுறை, தான பத்திரம் மூலம் வழங்குவது. குறிப்பாக, நெருங்கிய குடும்ப உறவுகளுக்குள் சொத்து உரிமை மாற்றம் செய்துகொள்ளும்போது இந்த முறையைக் கையாளலாம்.

ஒருவர் மற்றொருவரிடமிருந்து பண பலன்களை பெற்றுக்கொண்டு சொத்து உரிமை மாற்றம் செய்கிறபோது, அதை சொத்து விற்பனை என்று குறிப்பிடுகிறோம். இதுவே, தான பத்திரம் மூலம் மாற்றும்போது விற்பனை என்று ஆகாது.

அதாவது, சகோதரர் தனது சகோதரிக்கு சொத்தை தானமாக வழங்கலாம். சொத்தை தானமாக வாங்கியவர் அதை தனது கணவருக்கு தானமாகக் கொடுக்கலாம். இப்படி செய்வதன் மூலம் முத்திரைத்தாள் கட்டணம் இல்லாமல் உரிமை மாற்றம் செய்து கொள்ளலாம்.

ஆனால், தான பத்திரம் பதிவதற்கான கட்டணம் சொத்து வழிகாட்டி மதிப்பில் 1 சதவிகிதம் அல்லது அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய். இதுதவிர, பதிவு கட்டணம் இரண்டாயிரம் ரூபாய் கட்ட வேண்டும். தானம் கொடுப்பதை, தானம் வாங்குபவர் ஏற்று கொண்டு, அந்த இடத்தின் சுவாதீனத்தை, உடனடியாக அடைய வேண்டும்.

அந்த இடத்தின் மீதான வருவாய் ஆவணங்கள், பிற ஆவணங்களை உடனடியாக தானம் வாங்குபவர் தனது பெயருக்கு மாற்ற வேண்டும். தானம் ரத்து செய்ய இயலாத ஒன்று.

உயில்..!

இது விருப்ப ஆவணம்; சொத்தை தனிப்பட்ட முறையில், தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு எழுதித்தரும் முறைதான் உயில் எனப்படும். ஒருவர், தான் சம்பாதித்த தனிப்பட்ட சொத்துக்களை தனது இறப்புக்குப் பிறகு, தான் விரும்பும் நபருக்கு சிக்கல் இல்லாமல் போய்சேர வேண்டும் என்பதற்காக தனது சுயநினைவோடு எழுதித் தருவது. ஆனால், பூர்வீகச் சொத்தை உயிலாக எழுத முடியாது.

தனிப்பட்ட சொத்தை தனது வாரிசுகளுக்குத் தான் உயில் எழுதவேண்டும் என்கிற கட்டாய மில்லை. ரத்த உறவு அல்லாத மூன்றாம் நபர்களுக்கோ, அறக்கட்டளைகளுக்கோ உயிலாக எழுதித் தரமுடியும். அதேநேரத்தில், உயில் எழுதி வைக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட வாரிசுகளுக்கு சொத்து சேர்ந்துவிடும்.
மனநிலை சரியில்லாத நிலையில் அல்லது குடிபோதையில் எழுதப்பட்ட உயில் செல்லாது. மேலும், மைனர் மீது உயில் எழுதப்படுமாயின் அதற்கு காப்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும்.

வாரிசுச் சான்றிதழ்..!

வங்கி வைப்புநிதி, பங்குச் சந்தை முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்திருந்து எதிர்பாராமல் இறக்கும் பட்சத்தில் நாமினிகளிடத்தில் இந்த சொத்துக்கள் ஒப்படைக்கப்படும். ஆனால், நாமினி இல்லாதபட்சத்திலோ அல்லது நாமினி மீது வாரிசுகள் ஆட்சேபனை தெரிவிக்கும் பட்சத்திலோ வாரிசுச் சான்றிதழ் அடிப்படையில் அந்த சொத்துக்களை பெறலாம்.

ஆனால், ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருக்கும்பட்சத்தில் நீதிமன்றம் வழங்கும் இறங்குரிமை சான்றிதழ் அடிப்படையில் சொத்துக்கள் ஒப்படைக்கப்படும். ஒருவர் இரு திருமணம் செய்திருந்தால், அவரது இரு மனைவி குழந்தைகள், முதல் மனைவி ஆகியோர் வாரிசுகள் ஆவர்.

பொதுவாக, சொத்து பாகம் பிரிக்கும்போது குடும்பத்தின் அனைத்து வாரிசுகளிடமும் சம்மதம் பெறவேண்டும். ஒரு குறிப்பிட்ட வாரிசுக்குத் தெரியாமல் அல்லது அவரை புறக்கணித்து விட்டு பிரிக்கப்படும் பாகப்பிரிவினை செல்லாது. நீதிமன்றத்தில் இதை மறைத்து தீர்வு பெறப்பட்டிருந்தால், பின்னாட்களில் இது தெரியவரும்போது அந்த தீர்வு ரத்து செய்யப்படும்.

முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது இரண்டாவது திருமணத்தை இந்து திருமணச் சட்டம் அங்கீகரிக்கவில்லை. இதனால் இரண்டாவது மனைவிக்கு கணவனது சொத்தில் உரிமையில்லை. ஆனால், அவர் வசமிருக்கும் தனிப்பட்ட சொத்தில் உரிமை கோரமுடியும்”
பொதுவாக, சொத்து பாகப்பிரிவினையில் இதுபோன்று பல அடிப்படை விஷயங்களை கவனித்தாலே சிக்கலில்லாமல் உறவுகளை கையாள முடியும். வழக்கு நீதிமன்றம் என இழுத்தடிப்புகள் இல்லாமல் சொத்துக்களை பரிமாற்றம் செய்துகொள்ளலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios