Asianet News TamilAsianet News Tamil

அங்கீகாரம் இல்லாத மனைப் பிரிவுகள் மற்றும் வீட்டு மனைகளை வரைமுறைப்படுத்தும் தமிழக அரசின் விதிமுறைகள் இதோ…

Here are the terms of the Government of Tamil Nadu which are not authorized by the Unauthorized Land Divisions and Homes.
Here are the terms of the Government of Tamil Nadu which are not authorized by the Unauthorized Land Divisions and Homes.
Author
First Published May 22, 2017, 11:58 AM IST


விவசாய நிலங்களை லே அவுட்களாக மாற்ற, அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளைப் பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம், 2016 செப்டம்பர் 9-ஆம் தேதி தடை விதித்தது. இந்த வழக்கில் இன்னமும் இறுதித் தீர்ப்பு வரவில்லை.

இந்த நிலையில், கடந்த வாரம் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள இரண்டு அரசாணைகளில் (வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் 4-5-2017 தேதியன்று அரசாணை எண் 78 மற்றும் 79) வீட்டு மனைகளை வரைமுறைப்படுத்துவதற்கான கட்டணம் மற்றும் அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளுக்கான இதர கட்டணங்கள் மற்றும் விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்று வதற்கான விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

அங்கீகாரம் இல்லாத மனைப் பிரிவுகள் மற்றும் வீட்டு மனைகளை வரைமுறைப்படுத்தும் தமிழ்நாடு அரசின் விதிமுறைகள் மற்றும் (அரசாணை எண் 78/2017) முக்கிய அம்சங்கள் இனி…

2016-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதிக்கு முன்பு பத்திரப்பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகள், அந்த வீட்டு மனைகளுக்கு அருகேயுள்ள விற்பனை செய்யப்படாத மனைகளை மட்டுமே ஒழுங்குமுறை செய்ய முடியும்.

அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகள் மற்றும் மனைப் பிரிவுகளை (லே-அவுட்) ஒழுங்கு முறைப்படுத்த சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

நீர்நிலையில் உள்ள அரசு புறம்போக்கு நிலம், மனைப் பிரிவு லே-அவுட்கள் மற்றும் மற்ற மனைகளுக்குச் செல்லும் பாதையை மறித்து அமைந்துள்ள நிலம், உயர் அழுத்த மின்சாரம் பாயும் கம்பிகளுக்குக் கீழ் உள்ள மனைப் பிரிவுகள் உள்ளிட்டவை இந்த ஒழுங்குமுறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் இடம்பெறாது.

லே-அவுட்களில் பிளாட்களை ஒழுங்குபடுத்த அதிகாரம் பெற்றவர்கள்

நகர்ப்புற மாநகராட்சிப் பகுதி எனில், மாநகராட்சி ஆணையர். நகராட்சிப் பகுதி எனில், நகராட்சி ஆணையர். பேரூராட்சிப் பகுதி எனில், செயல் அலுவலர். கிராமப் பஞ்சாயத்து எனில், வட்டார வளர்ச்சி அலுவலர் (பிளாக் டெவலப்மென்ட் ஆபீஸர்).

லே-அவுட்களை ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரம் உள்ளவர்கள்

சென்னை மெட்ரோபாலிட்டன் பிளானிங் ஏரியா எனில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர்-செயலர் ஆவார். மற்ற பகுதிகள் எனில், லே-அவுட் இடம்பெற்றுள்ள பகுதியின் லோக்கல் பிளானிங் அத்தாரிட்டி (எல்.பி.ஏ) உறுப்பினர்-செயலர் அல்லது மண்டல பிளானிங் அத்தாரிட்டி அல்லது மண்டல டெபுடி டைரக்டர் அல்லது டி.டி.சி.பி உதவி இயக்குநர் ஆகியோர்.

ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான கட்டாய விண்ணப்பம்

ஒவ்வொரு பிளாட் உரிமையாளரும் லே-அவுட் டெவலப்பரும் படிவம் 1 விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம், தகுந்த அதிகாரியிடம் விண்ணப்பிக்க வேண்டும். அதுவும் இந்த அரசாணை வெளியிடப்பட்டதிலிருந்து ஆறு மாதத்துக்குள்ளாக விண்ணப்பிக்க வேண்டியது கட்டாயம், இதற்கான கட்டணம் ரூ.500.

தகுதி வாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட வடிவமைப்புக் கட்டமைப்பின் முதன்மை அனுமதிக்குப் பிறகே தனிப்பட்ட பிளாட்கள் ஒழுங்குமுறைக்கான விண்ணப்பம் பரிசீலனை செய்யப்படும். இதற்கு உறுதுணையான ஆவணங்கள் அதாவது, விற்பனைப் பத்திரம், பட்டா, லே-அவுட் பிளான், எஃப்.எம்.பி ஸ்கெட்ச், பதிவுத் துறையால் ஒரு வாரத்துக்கு முன்பு அளிக்கப்பட்ட மிகச் சமீபத்திய வில்லங்கமில்லாச் சான்றிதழ் மற்றும் அதனுடன், இடத்தின் அமைப்பு, சாலைகள், அணுகுசாலைகள், திறந்தவெளி ஒதுக்கீடு (ஓஎஸ்ஆர்) அவற்றின் கிராம சர்வே எண்கள் ஆகியவற்றை ஆன்லைன் ஃபார்ம் 1 விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

ஒருவேளை, குறிப்பிட்ட மனையானது, வேளாண் நிலப்பகுதியாக இருந்தால், அந்த லே-அவுட், விவசாயத்துக்கான நீர் வழித்தடத்தை எந்த வகையிலும் தடை செய்யவில்லை என்பதுடன், நீர் தேங்கும் அளவையும் சேர்த்து தாசில்தாரிடம் இருந்து சான்றிதழ் அல்லது ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்டை பெற்று, மற்ற ஆவணங்களுடன் சேர்த்து தாக்கல் செய்ய வேண்டும்.

அனைத்துக்கும் மேலாக அங்கீகாரம் இல்லாத மனைப் பிரிவுகளை ஒழுங்குமுறைப்படுத்த மனை பற்றிய கூடுதல் விவரங்களை, சுய உறுதிமொழியுடன் மற்ற ஆவணங்களுடன் சேர்த்து தாக்கல் செய்ய வேண்டும்.

அதாவது, அங்கீகாரம் கேட்டு விண்ணப்பிக்கப்படும் குறிப்பிட்ட லே-அவுட்டுக்குச் செல்லும் சாலையானது, மாநகராட்சி அல்லது நகராட்சிப் பகுதியாக இருந்தால் குறைந்தது 4.8 மீட்டர் அகலத்துடன் இருக்க வேண்டும். அதுவே, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதியாக இருந்தால், 3.6 மீட்டர் அகலம் இருக்க வேண்டும். இதுபோன்ற தகவல்களை விண்ணப்பத்தில் அளிக்க வேண்டும்.

ஒருவேளை வரைமுறைப்படுத்தப்பட வேண்டிய அங்கீகாரம் பெறாத மனைப்பிரிவின் மனைகளில் 2/3 பகுதி, கட்-ஆஃப் தேதிக்கு முன்னர் அதாவது அக்டோபர் 20, 2016-க்குமுன், விற்பனை செய்யப்பட்டிருந்தால், ஒழுங்குமுறைப்படுத்தக் கோரி லே-அவுட் புரொமோட்டர் / பதிவு செய்யப்பட்ட கூட்டுறவுச் சங்கம் / மனை உரிமையாளர்கள் சங்கத்திடம் விண்ணப்பிக்க வேண்டும்.

திறந்தவெளிப் பகுதிக்காகக் குறிப்பிட்ட அளவு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஒருவேளை, ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனில், விற்கப்படாத மனைகளைத் திறந்தவெளி ஒதுக்கீடு பகுதியாக மாற்ற வேண்டும். அப்படி மாற்றும்போது புரொமோட்டர் அல்லது பிளாட் உரிமையாளர்கள் இதற்கான தடையில்லாச் சான்றை அளிக்க வேண்டும். திறந்தவெளி பகுதிக்கான நிலத்தை அதாவது, ஓ.எஸ்.ஆர் நிலத்தை ஒதுக்கீடு செய்ய முடியாத சூழலில், பற்றாக்குறை எவ்வளவு இருக்கிறதோ, அதற்கு இணையான அபராதம் வசூலிக்கப்பட வேண்டும்.

அதாவது, லே-அவுட்டின் மொத்தப் பரப்பில் 10% ஓஎஸ்ஆர் நிலம் இருக்க வேண்டும். அதில், எவ்வளவு பற்றாக்குறை இருக்கிறதோ, அதற்கேற்ப தற்போதைய வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் அபராதம் விதிக்கப்படும்.

ஒழுங்குமுறைப்படுத்தக் கட்டணம்

மனை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான கட்டணம், மனையின் சதுர மீட்டர் அளவில் கணக்கிடப்படும். நகர்ப்புற மாநகராட்சிப் பகுதிக்கு ரூ.100. நகராட்சிப் பகுதிக்கு ரூ.60. பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிக்கு ரூ.30 ஆகும்.

வளர்ச்சிக் கட்டணம்

வளர்ச்சிக் கட்டணம் என்பது பிளாட்டின் சதுர மீட்டர் அளவில் கணக்கிடப்படும். நகர்ப்புற மாநகராட்சிப் பகுதிக்கு ரூ.600. சிறப்பு மற்றும் தேர்வுநிலை நகராட்சிக்கு ரூ.350. கிரேடு 1 மற்றும் கிரேடு 2 நகராட்சிப் பகுதிக்கு ரூ.250. பேரூராட்சிப் பகுதிக்கு ரூ.150. ஊராட்சிப் பகுதிக்கு ரூ.100.

திறந்தவெளிப் பகுதி (ஓஎஸ்ஆர்) ஒதுக்கீட்டுக்கான கட்டணம்

மனைகளை ஒழுங்குமுறைப்படுத்த, டெவலப்மென்ட் ரெகுலேஷன்படி, திறந்தவெளி ஒதுக்கீடு இருப்பது அவசியம். இது எந்தப் பகுதியில் விண்ணப்பிக்கப்படுகிறதோ அதற்கேற்பக் கணக்கீடு செய்யப்பட்டுக் கட்டணம் நிர்ணயிக்கப்படும்.

மனைப்பிரிவை ஒழுங்குமுறைப்படுத்த, திறந்தவெளிப் பகுதி ஒதுக்கீட்டுக் கட்டணமாக ஒட்டுமொத்த லே-அவுட்டின் வழிகாட்டி மதிப்பில் 10 சதவிகிதத்தை வசூலிக்க வேண்டும். இந்த விவகாரத்தில், 2012 மார்ச் 31 வரையிலான காலத்தில் பதிவு செய்யப்பட்ட இடமாக இருந்தால், பதிவுத்துறை ஆகஸ்ட் 1, 2007-ல் வெளியிட்ட வழிகாட்டி மதிப்பின்படி கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும். இதுவே, 2012 ஏப்ரல் 1-க்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட நிலமாக இருந்தால், தற்போது நடைமுறையில் உள்ள வழிகாட்டி மதிப்பின் கீழ் அபராதம் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

ஒரு சதுர மீட்டர் என்பது 10.76 சதுர அடி. இதன்படி ஒழுங்குமுறைக் கட்டணம் மற்றும் வளர்ச்சிக் கட்டணம் (ஓ.எஸ்.ஆர் கட்டணம் தவிர்த்து) சதுர அடிக் கணக்கில் பின்வரும் அளவில் வசூலிக்கப்படும்.

நகர்ப்புற மாநகராட்சிப் பகுதிக்கு ரூ.65.05. சிறப்பு மற்றும் தேர்வுநிலை நகராட்சிப் பகுதிக்கு ரூ.38.10. கிரேடு 1 மற்றும் கிரேடு 2 நகராட்சிப் பகுதிக்கு ரூ.28.81. பேரூராட்சிப் பகுதிக்கு ரூ.16.72. ஊராட்சிப் பகுதிக்கு ரூ.11.15.

ஒழுங்குமுறைப்படுத்தாவிட்டால் எதிர்கொள்ளக்கூடிய விளைவுகள்

புதிய விதிமுறைப்படி, அங்கீகாரம் இல்லாத மனைகளை ஒழுங்குமுறைப்படுத்தாவிட்டால் பின்வரும் விளைவுகளைச் சந்திக்க வேண்டும். மின்சாரம், தண்ணீர் இணைப்பு, கழிவுநீர் இணைப்பு உள்ளிட்டவை அளிக்கப்படமாட்டாது. அத்தகைய அங்கீகாரம் இல்லாத மனைகள், பதிவுச் சட்டம் 1908-ன் கீழ் பதிவு செய்யப்பட மாட்டாது.

இந்த அங்கீகாரம் இல்லாத மனைப் பிரிவுகளில் வீடு கட்டுவதற்குச் சம்பந்தப்பட்ட துறை அனுமதி அளிக்காது.

Follow Us:
Download App:
  • android
  • ios