Here are the features of the Modular Panel System ...
சிறப்பம்சங்கள்:
எம்பிஎஸ் (மாடுலர் பேனல் சிஸ்டம்) வெவ்வேறு அளவுகளைக் கொண்ட பேனல்களைத் தயாரித்துத் தருகிறது. இவை உறுதி மிக்கவை. நீடித்து உழைக்கக் கூடியவை. இவற்றைத் தயாரிப்பதற்கு 6 மி.மீ தடிமன் கொண்ட இரும்புத் தகடுகளைப் பயன்படுத்துகிறார்கள். இவை எளிதில் அரிப்பிற்குள்ளாகாத உயர்ந்த தரம் உடையவை. இந்தப் பாளங்களின் முகப்புப் பகுதியில் தரம் உயர்ந்த பின்லாந்து நாட்டின் பிர்ச் மர பிளைவுட் பலகைகளைப் பொருத்தி இருக்கிறார்கள். கன மீட்டருக்கு 780 கிலோ என்ற அளவிலான அடர்த்தி கொண்டவை இவை. ஆகவே உறுதிக்குக் குறைவில்லை.
இந்தப் பிளைவுட் பலகைகளின் மேற்புறத்தில் பீனால் அடிப்படையிலான பிசினைக் கொண்ட பூச்சும் கொடுக்கப்பட்டிருக்கிறது.பிளைவுட் பகுதிகளின் விளிம்புகள் சேதம் அடைந்துவிடாமல் இருப்பதற்காக இரும்புத் தகடுகளைக் கொண்டு மூடப்பட்டுள்ளன.
மேலும் ஒரு பேனலுக்கும் மற்றொரு பேனலுக்கும் சட்டங்கள் மற்றும் புறப்பரப்பிற்கு இடையில் இடைவெளியை அடைக்கத்தக்க விதத்தில் பொருத்தமான நிரப்பிகளையும் பயன்படுத்துகிறார்கள். இதனால் இணைப்புகளுக்கு இடையில் கசிவே ஏற்படாது.இந்த வகைப் பேனல்களை அதிகத் தடவைகளுக்கு மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.
சுமார் 300 தடவைகள் வரை பயன்படுத்த முடியும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. சட்டங்கள் இரும்பினால் ஆனவை என்பதால் அவற்றின் ஆயுளும் நீண்ட காலம் நீடிக்கும்.
நேரான சுவர்கள், வட்ட வடிவச் சுவர்கள்,கிணறு போன்ற பள்ளம், தூண் எதை வேண்டுமானாலும் எம்பிஎஸ் மூலம் உருவாக்கலாம். கான்கிரீட்டைக் கலந்ததும் உடனடியாகக் கொட்டிக் கட்டுமானத்தை உருவாக்க வேண்டிய தேவை உள்ள எந்த வேலைக்கும் இந்த தொழிற்நுட்பம் ஏற்றது.
அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் பெரிய பெரிய திட்டங்களுக்கு இந்த முறையைப்பின்பற்றுவது பெரிதும் பலனளிக்கும். பெரிய தொழிற்சாலைகள், நீர் சுத்திகரிப்பு ஆலைகள், கால்வாய்கள், பாலங்கள், அணைகள் என எதை வேண்டுமானாலும் கட்டுவதற்கு எம்பிஎஸ் ஏற்ற முறையாக இருக்கும்.
