Asianet News TamilAsianet News Tamil

ஜீரோ எனர்ஜி வீடுகள்-னா என்ன தெரியுமா? இதுக்கு வரவேற்பு அதிகம்-ங்க…

Do you know Zero Energy Homes?
Do you know Zero Energy Homes?
Author
First Published Jul 17, 2017, 1:46 PM IST


ஜீரோ எனர்ஜி வீடுகள்:

இயந்திர, மின்சார, வெப்ப ஆற்றல் எதுவுமே தேவைப்படாத வீடுதான் ஜீரோ எனர்ஜி வீடு (ஜீரோ எனர்ஜி சிஸ்டம்) என்பார்கள்.

இது எப்படி இயலும் என்று எண்ணத் தோன்றும்.  மிகமிகக் குறைந்த அளவிலேயே இவற்றைப் பயன்படுத்திக் கட்டுமான வேலைகளைச் செய்து முடிக்க வழி கண்டுபிடிக்க வேண்டும்.

எடுத்துக்காட்டு:

கான் கிரீட்டைப் பக்குவப்பட வைக்கும் வேலைகளை எடுத்துக் கொள்வோம். இதற்கு இயந்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது. மின்சாரம் தேவைப்படக் கூடாது. செலவு ஆகும். வெப்பம் அல்லது குளிர்ச்சியைச் செயற்கையாக ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கக் கூடாது. இப்படி எல்லா வகையிலும் முடிந்த வரை செலவுகளைக் குறைந்த பட்ச அளவில் வைத்துக் கொள்ள முடியுமா?

என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்றலாம்?

சிமென்ட்டானது தண்ணீருடன் சேர்க்கப்படும்போது வெப்பம் வெளிப்படுகிறது. கான்கிரீட் கலவை தயாரிக்கப்படும்போது இதுதானே நிகழ்கிறது. அதாவது, வெப்ப ஆற்றல் இலவசமாகக் கிடைக்கிறது. இந்த வெப்பத்தையே கான்கிரீட்டைப் பக்குவப்படுத்துவதற்கு உபயோகிக்க வேண்டும். இது ஒரு உத்தி.

ஒரு குறிப்பிட்ட அளவு வெப்பம் இருக்கிறது. அது நேரம் செல்லச் செல்லக் குறைந்து கொண்டே போகும். அவ்வாறு குறையவிடாமல் பாதுகாத்து நிலை நிறுத்துவது இன்னொரு உத்தி. வெப்பத்தைக் கடத்தாத கோணிகள், பாய்களைக் கொண்டு மூடி வைத்துப் பாதுகாப்பதை எளிதில் செய்ய முடியும் இல்லையா?

இதுமாதிரியான பல வழிமுறைகளைப் பின்பற்றுவதால், கிடைப்பதைப் பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இருப்பது குறைந்து போகாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இதில் கவனம் செலுத்தினால் வேறு பல வேலைகளையும் தேவைகளையும் குறைக்கலாம். அதன் மூலம் செலவுகளைத் தன்னால் கீழே கொண்டு வந்துவிடலாம். இதைப் பற்றி விரிவாக ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.

எதற்காக இந்த ஜீரோ எனர்ஜி சிஸ்டம்?

முடிந்தவரை இயந்திரங்களைப் பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும். மின்சாரத்தை எதிர்பார்த்து நிற்பதைத் தவிர்க்க வேண்டும். வெப்பத்தைப் பயனுள்ள விதத்தில் பயன்படுத்துவதற்காக அதை இழக்காமல் இருக்க வழி காண வேண்டும்.

ஜீரோ எனர்ஜி சிஸ்டம் என்ற வழிமுறை இதற்கெல்லாம் தீர்வை அளிக்கிறது. இது இத்தாலி நாட்டில் 2001 ஆம் ஆண்டு முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது.

இதை அவர்கள் எப்படிச் சாதித்தார்கள்?

கான்கிரீட் பக்குவடையும் நிலையில் அதனுடன் சேர்க்கப்படும் வேதிப் பொருட்கள் மற்றும் சேர்மானங்களை விதவிதமாக உருவாக்கினார்கள். இந்த விதத்தில் பல கடினமான வேலைகளுக்கு அவசியம் இல்லாமல் போய்விட்டது.

கான்கிரீட்டைப் பக்குவப்படுத்தும் தேவைக்கு அதிகம் செலவழிக்க வேண்டியதில்லை என்ற நிலை உருவாயிற்று. கட்டுமானத்தின் தரம் உயர்ந்தது. பாதுகாப்பான செயல்பாடுகளுக்கு வழி பிறந்தது.  வழக்கமான கட்டுமான உத்திகளைக் காட்டிலும் இது பல வழிகளிலும் மேம்பட்டதாக இருப்பது உணரப்பட்டது.

ஜீரோ எனர்ஜி சிஸ்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது?

கான்கிரீட் தயாரிப்பு, அதைப் பயன்படுத்தும் தேவை, பக்குவப்படுத்துவதற்கான முயற்சிகள் ஆகியவற்றில் குறைந்தபட்ச இயந்திர இயக்கம். மிகக் குறைந்த மின்சாரத் தேவை. மிக மிகக் குறைந்த வெப்பத் தேவை. இவைதான் ஜீரோ எனர்ஜி சிஸ்டத்தின் முக்கிய நோக்கங்கள்.

மின்சாரத்தைப் பயன்படுத்தி வெப்பத்தையோ குளிர்ச்சியையோ செயற்கையாக உருவாக்குவதைத் தவிர்க்க வேண்டும். இதற்கான மின்செலவை மிச்சப்படுத்த முடிந்தாலே அது கட்டுமானச் செலவுகளைக் கணிசமாகக் குறைக்க உதவும்.மின் செலவு குறைக்கப்பட்டாலே கணிசமானசிக்கனம் ஏற்படும்.

இயந்திரங்களுக்கான தேவைகளைக் குறைத்தால் அவற்றை இயக்குவதற்குத் தேவைப்படும் ஆட்களின் கூலி வகையிலான செலவுகளும் குறையவே செய்யும்.

ஜீரோ எனர்ஜி சிஸ்டம் வழிமுறையைப் பின்பற்றுவதால் கான்கிரீட்டின் தரமும் ஆயுளும் கூடக் கூடுகின்றன என்பதை ஆராய்ச்சி முடிவுகள் அறிவிக்கின்றன. தேவைப்படும் மூலப் பொருட்களின் அளவையும் கணிசமாகக் குறைக்கலாம். ஆற்றலுக்கான செலவுகள் என்று எடுத்துக் கொண்டால் ஆட்கூலி முதல் பெட்ரோலுக்கும் மின்சாரத்திற்கும் ஆகும் செலவுகள் எல்லாமே கணக்கில் வந்துவிடும்.

கிளீனியம் கட்டுமான வேதிப் பொருட்களைத் தயாரிப்பதில் புகழ் பெற்ற நிறுவனம் பிஏஎஸ்எஃப். இவர்கள் கிளீனியம் ஏசிஈ என்ற வேதிப் பொருளை அளிக்கிறார்கள். இதை வாங்கிப் பயன்படுத்துவது ஜீரோ எனர்ஜி சிஸ்டத்திற்கு ஏற்ற வழியாகும்.  கான்கிரீட் ஆரம்ப நிலையிலேயே அதிக வலுக் கொண்டதாக உருவாக்குவதற்கு இது உதவுகிறது. அதனை சூப்பர் பிளாஸ்டிசைசர் என்றும் குறிப்பிடுவார்கள். அது அண்மைக்காலக் கண்டுபிடிப்பு. 

பாலி கார்பாக்சிலேட் ஈதர் என்றும் அழைக்கப்படுவது உண்டு.கட்டட பாகங்களை முன்னதாகவே தயாரித்து வைத்துக் கொண்டு பயன்படுத்த வழி செய்யும் பிரி காஸ்ட் தொழில்நுட்ப வேலைகளுக்கு இது பெரிதும் பயன்படும். ஆற்றல் தேவைகளைக் குறைப்பதற்கு இது உரிய வழியாகும்.

சிமென்ட் பரப்பின் மீது கிளீனியம் மூலக் கூறுகள் வெகு வேகமாக ஈர்க்கப்படுகின்றன. இதன் மூலம் மின்னேற்றம் பெற்ற துகள்கள் ஒன்றையொன்று விலக்கும் நிலை ஏற்படுகிறது. இது தனித் தனி சிமென்ட் துகள்களை நன்கு பரவ வைக்கிறது. இந்தப் பரவல் சீராக இருந்தால் கான்கிரீட் உறுதியடைவது விரைவடையும்.

சிமென்ட் துகள்களைச் சுற்றிலும் ஒரு போர்வையைப் போல் மூடிக் கொள்ளும் பிளாஸ்டிசைசர்கள் அதற்குள் இருக்கும் ஈரம் அவ்வளவு எளிதில் வெளியேறிவிடாதபடி பார்த்துக் கொள்கின்றன. நீண்ட நேரத்திற்கு ஈரம் நிலை நிறுத்தப்படுவது கான்கிரீட் இறுகுவதற்கு அதிக நேரம் தேவைப்படும். ஆனால் கிளினீயம், அதிக அளவு சிமென்ட் பரப்பைத் தண்ணீருடன் வினைபுரிய வழி செய்கிறது.

இதன் மூலம் சிமென்டும் தண்ணீரும் சேரும் போது உருவாகும் வெப்பம் விரைவில் உற்பத்தியாக நேர்கிறது. இதன் விளைவாக, கான்கிரீட் வெகு விரைவாக உறுதி அடைகிறது. மிகக் குறைந்த வெப்ப நிலைகளிலும், கடுங்குளிர் நிலவும் சூழ்நிலைகளிலும் கூட கிளீனியம் தனது செயல்பாடுகளில் குறை வைப்பதில்லை.

ஆகவே இதை எங்கும் பயன்படுத்தலாம் என்றிருப்பதால் கட்டுமானத் தொழிலில் இதற்குப் பெரும் வரவேற்பு உள்ளது.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios