மனிதர்களுக்கு ஜீன்ஸ் எப்படி நவநாகரீக உடையோ அதேபோன்று கட்டிடங்களுக்கு “க்ளேசிங் படலம்” ஜீன்ஸ் போல காட்சியளிக்கிறது.

முன்பெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த “க்ளேசிங் கண்ணாடி” கட்டிடங்கள், அனைத்து ஐடி பார்க்குகள், ஷாப்பிங் மால்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், மருத்துவமனைகள், திரையரங்குகள் அனைத்திலும் கிளேசிங் வடிவமைப்பு செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் உள்ள முக்கிய பகுதிகளின் கட்டிடங்களில் கிளேசிங் செய்யாத கட்டிடங்கள் காண்பதற்கு அரிது. மெல்ல மெல்ல குடியிருப்பு கட்டிடங்களுக்கும் கிளேசிங் ஜீன்சை மாட்ட துவங்கியிருக்கிறார்கள் கட்டுநர்கள்.

எதற்காக கிளேசிங் செய்வது?

முதல் தேவை என்று பார்த்தால் மின் செலவைக் குறைப்பது. கிளேசிங் செய்யப்பட்ட கட்டடத்தில் உறுதியான சுவர் பாதுகாப்பாக நிற்கும். என்றாலும் அதன் வழியாக நல்ல சூரிய வெளிச்சம் கட்டடத்திற்குள் நுழையும். இப்படி இயற்கையாகவே வெளிச்சம் உள்ளே வர வழி செய்து விடுவதால் செயற்கையாக மின் விளக்குகளை எரிய விட வேண்டிய தேவை குறையும். ஆகவே மின் கட்டணமும் இறங்கும். சிக்கனம்.

கட்டடச் சுவர்களை கிளேஸ் செய்தால் வெளிச்சத்திற்கு வெளிச்சமும் கிடைக்கும். தொல்லைகளும் குறையும். மின் சாதனங்களை இயக்க வேண்டிய தேவையும் குறையும்.

கிளேசிங்கின் வகைகள்:

கிளேசிங் வேலைகளை நான்கு விதமாக வகைப்படுத்தலாம். அவை
சிங்கிள் கிளியர் கிளேசிங், டபுள் கிளியர் கிளேசிங், லோ ஈ சிங்கிள் கிளேசிங், லோ ஈ டபுள் கிளேசிங்

சிங்கிள் கிளியர் கிளேசிங்

இது ஒற்றை அடுக்கைக் கொண்ட கிளேசிங். ஒரே கண்ணாடித் தகட்டைக் கொண்டு கிளேஸ் செய்வது.  இதில் வெளிச்சம் முழு அளவுக்கு அனுமதிக்கப்படும். அதே மாதிரித்தான் வெப்பமும்.வெளி வெப்பம் உள்ளே வரும். உட்புறக் குளிர்ச்சி வெளியேறும். அறைக்குள் கதகதப்பை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பினால் இந்த முறை ஏற்றதாக இருக்கும். வெளிச்சமும் தங்கு தடையில்லாமல் உட்புக இது பொருத்தமானது.

டபுள் கிளியர் கிளேசிங்

இது ஒற்றை அடுக்கு கிளேசிங்கை விடச் சற்று மேலானது. வெப்பத் தடுப்புத் தன்மையை உள்ளடக்கியது. இதற்குரிய விளக்கமும் பெயரில் இருந்தே பெறத் தக்கது. இரண்டு அடுக்குகளாகக் கண்ணாடிப் படலங்களை அமைக்கும் முறை இது. இவ்வாறு அமைக்கப்படும் இரண்டு கண்ணாடி அடுக்குகளுக்கு இடையில் காற்று இடம் பெற்றிருக்கும்.

கண்ணாடி, காற்று, கண்ணாடி என்று வரிசையில் வெப்பம் கடந்து வர, போக வேண்டிய பாதை அமையும். ஆகவே அறைக்குள் வெப்பம் வருவதாக இருந்தாலும் குளிர்ச்சி வெளியேற நினைத்தாலும் இந்தப் பாதை வழியாகத்தான் சென்றாக வேண்டும்.

கண்ணாடிப் பரப்புகளுக்கு இடையில் இருக்கும் காற்று இந்தப் போக்கை மட்டுப்படுத்தும். கட்டுப்படுத்தும். வெப்ப இழப்பு தடுக்கப்படும். ஒற்றை கிளேசிங்கில் இந்தப் பயன் கிடைக்காது.

இரட்டை அடுக்கு கிளேசிங் இருக்குமானால் கண்களுக்கு எளிதாகப் புலப்படும் ஒளி அலைகளை உட்புக அனுமதிப்பது இயல்பாக நடக்கும். இதனால் அறைகளுக்குள் நல்ல பார்வைத் தெளிவு உண்டாகும். குளிர்ப் பகுதிகளில் அறைகளுக்குள் இயற்கையாகவே கதகதப்பை ஏற்படுத்த இது ஏற்ற வழியாக இருக்கும்.

லோ ஈ சிங்கிள் கிளேசிங்

உட்புகுந்த சூரியக் கதிர்கள் மீண்டும் வெளியேறுவதைத் தடுக்க இந்த முறை பயன்படும். ஒற்றை, இரட்டை கிளேசிங் முறைகளுக்கும் இதைப் பயன்படுத்தலாம். நல்ல வெளிச்சமும் வெப்பப் பண்புகளும் கிடைக்கும்.

தேவைப்படாத ஒளி அலைகளைத் தடுக்கவும் முடியும்.அகச்சிவப்புக் கதிர் வீச்சினால் ஏற்படும் அபாயங்களையும் தடுக்கலாம். வீட்டுக்குள் வெயில் விழுந்தாலும்அதனால் வெப்பம் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.

லோ ஈ டபுள் கிளேசிங்

கண்ணாடித் தகடுகளின் மேல் தனிப் பூச்சுக்களை ஏற்படுத்துவார்கள். கண்ணாடித் தகடுகளுக்கு இடையில் கிரிப்டான் அல்லது ஆர்கன் முதலிய வாயுக்களை நிரப்புவார்கள். இதுதான் இந்த வகை கிளேசிங்கின் தனித்துவம். இது குளிர்காலத்தில் குளிர் இழப்பையும் வெயில் காலத்தில் வெப்ப அதிகரிப்பையும் தடுக்கும்.